மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் ஆர்வம் - அதிருப்தியில் ஆதரவாளர்கள்
மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகிப்பதாக கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, தொகுதிகளை இறுதி செய்வது குறித்தும், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்தும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவே தாம் விரும்புவதாக ஓ.பி.எஸ் கூறிவரும் நிலையில், அவரது மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புவதாக கூறப்படுகிறது.
ரவீந்திரநாத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொடர் அதிருப்தியில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவார்கள் நேற்று ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டதாகவும், கடந்த இரு வாரங்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நேற்று இரவோடு இரவாக சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், எஞ்சிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என கூறப்பட்டுள்ளது.
Comments