ஜாபர் கடத்தியது இப்படித்தானாம்.. மசாலா பாக்கெட்டிற்குள் சூடோபெட்ரின் வைத்த சதா..! அடுத்த டார்கெட் இவர்கள் தான்..!
சென்னையில் இருந்து மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் மறைத்து சூடோபெட்ரின் போதை பொருளை கடத்திய ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளியான சதானந்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்து சிக்க இருக்கும் பிரபலங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருளை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் , ஜாபரிடம் நடத்திய விசாரணையில் அவரது கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த வலது கரமாக செயல்பட்டதாக சதா என்கிற சதானந்தம் என்பவரை கைகாட்டியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து சதானந்தத்தை கைது செய்துள்ளனர்.
சென்னை , செங்குன்றம், திருச்சியில் உள்ள குடோனை மொத்தமாக நிர்வகித்து வருபவர் தேனாம்பேட்டையை சேர்ந்த சதா.
கடந்த பத்து வருடங்களாக ஜாபர் சாதிக்குடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
பிரபல நிறுவனத்தின் மசாலா பாக்கெட் , தேங்காய் பவுடர், ராகி பவுடர் உள்ளிட்ட பல்வேறு பாக்கெட்டிற்குள் சூடோபெட்ரின் பாக்கெட்டை பேக்கிங் செய்து அனுப்பும் வேலையை சதா கச்சிதமாக செய்து வந்ததாகவும், விமான நிலையங்களின் கார்கோ மூலமாக வெளி நாடுகளுக்கு போதைப்பொருளை அனுப்பி வைப்பதை சதா செய்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருளை பல முறை கடத்தி இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் , கைது செய்யப்பட்ட சதாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் எடுத்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்யும்போது அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு நெருக்கமாக இருந்த தொழில் முறை கூட்டாளிகளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில், சதா மீது மூன்று போதைப் பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மசாலா பாக்கெட்டுக்குள் வைத்து சூடோபெட்ரினை கடத்திய மாஸ்டர் மைண்ட் சதானந்தம் என்று கூறப்படும் நிலையில் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் நபர்களை பிடித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே டெல்லி சென்று சந்தித்த தன்னிடம் ஜாபர் சாதிக், இறைவன் பார்த்துக்கொள்வார் என்று கூறியதாக வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்தார்
Comments