உங்க நாய்களுக்கு ஊசி போடணும்.. பெண்ணை வீடு புகுந்த கொன்ற கூலிப்படை இளைஞர் சிக்கியது எப்படி ? ‘சீரியசாக சிஸ்டர் போட்ட ஸ்கெட்ச்’

0 1155

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் வளர்ப்பு நாய்க்கு ஊசி போட வந்த கால்நடை மருத்துவர் என்று கூறி  வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை இளைஞர் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பிய சம்பவத்தை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து துப்புத்துலக்கி உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் , இவரது மனைவி காளியம்மாள்.

மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விபத்தில் ஜெயபால் இறந்துவிட, அதே பகுதியை சேர்ந்த 28 வயதான ராமச்சந்திரன் என்ற வசதி படைத்த இளைஞரை, வயதில் மூத்தவரான காளியம்மாள் காதலித்து இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்துக்கு ராமச்சந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி வீட்டின் பின் பகுதியில் காளியம்மாள் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

அந்தப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்த போது கொலை நடந்த தினத்தன்று கீழ விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரித்த போது, காளியம்மாள் கொலை சம்பவத்தின் மர்மம் விலகியது.

ராமச்சந்திரனின் தந்தை கோவையில் பெரிய இரும்புக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

கோடிக்கணக்கில் சொத்தும் உள்ளது. 28 வயதான தனது தம்பி 38 வயதான காளியம்மாளை திருமணம் செய்தது, கோவையில் வசித்து வரும் அவரின் சகோதரி விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. தம்பியின் சொத்து முழுவதும் காளியம்மாளுக்கு போய் விடும் என்று பயந்துள்ளார்.

இதனால், தனக்கு தெரிந்த ஜெயபால், தோழி கவிதா , அவரின் நண்பர் விவேக், கலைச்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து காளியம்மாளை கொல்ல விஜய லட்சுமி சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகின்றது

கொலை செய்வதற்கு முன்பணமாக முதலில் 50 ஆயிரம் ரூபாயும் பின்னர் கூடுதலாக 20 ஆயிரமும் பெற்றுக் கொண்ட ஜெயபால் , காளியம்மாள் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

வீட்டில் ஏராளமான நாய்கள் வளர்க்கப்படுவதை நோட்டமிட்ட ஜெயபால், கால்நடை மருத்துவர் போல சென்று , நாய்களுக்கு ஊசி போடுவது போல நடித்துள்ளார் .

அப்போது, ஊசி போடுவதற்காக வளர்ப்பு நாயை காளியம்மாள் பிடித்து கொண்டிருந்த போது, கயிறால் அவரது கழுத்தை இறுக்கி ஜெயபால் கொலை செய்துவிட்டு தப்பியதாக தெரிவித்த போலீசார் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த விஜயலட்சுமி, கவிதா, விவேக், ஜெயபால் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments