காவல் நிலையத்தில் டூவீலர் திருட்டு 3 களவாணி போலீசார் சஸ்பெண்டு

0 514

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கியர் சைக்கிளை திருடியதாக 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசாரால் குற்ற வழக்கு தொடர்புடைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் காவல் நிலைய வளாகம் மற்றும் அதனை ஒட்டிய தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27 ஆம் தேதி மேற்கு இணை ஆணையர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது குற்ற வழக்கு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படி அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த இருசக்கர வாகனங்களை சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றி விருகம்பாக்கம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் கொண்டு போய் வைத்தனர்.
கணக்கெடுப்பின்போது காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களை விட, தற்காலிக மைதானத்தில் இறக்கி வைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், காவல் நிலைய போலீசரிடம் விசாரணை மேற்கொண்ட போது தங்களுக்கு தெரியவில்லை என மழுப்பி உள்ளனர். சிசிடிவி காட்சிகளை காவல் அதிகாரிகள் ஆய்வுசெய்த போது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூன்று காவலர்களும் சேர்ந்து, விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் விலை உயர்ந்த கியர் சைக்கிள் ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் ஏற்றி தங்களுக்கு தெரிந்த மெக்கானிக் கடையில் இறக்கி வைத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மெக்கானிக் கடை உரிமையாளரிடம் விசாரித்த போது , 3 போலீசாரும் தனது கடையில் பைக்குகளை நிறுத்தி வைத்து விட்டு பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றதாகவும் திருட்டு சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறி உள்ளார். முன்னதாக கடந்த 1-ம் தேதி இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டுகளில் நிறுத்தி வைத்த நிலையில், பைக் திருட்டு சம்பவம் காவல் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றதும், உஷாரான களவாணி போலீசார் 3 பேரும் 4 ந்தேதி மீண்டும் இரு சக்கர வாகனங்களை காவல் நிலையத்துக்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் திருட்டு சம்பவம் உறுதியானதால் மூன்று காவலர்களையும் பணியிட நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY