பெண் சாமியாரை மறித்து தாக்கிய ஆசாமிகள் யார்? ‘நோ ராம்’ சொல்லி தாக்கியதாக புகார்..!
உத்திரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக வந்த பெண் துறவி மீது பரமக்குடி அருகே பெயர் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நவம்பர் மாதம் நடை பயணமாக புறப்பட்டவர் பெண் துறவி ஷிப்ரா பதக். 38 வயதான இவருடன், அவரது தந்தை சகோதரர் ஆகியோர் காரில் துணைக்கு வந்தனர்.
வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வந்த ஷிப்ரா பதக் சிவராத்திரியையொட்டி
அந்தப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு பரமக்குடியில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் தங்கினார். சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு மேல் புறப்பட்டு பரமக்குடி சத்திரக்குடி இடையே நடந்து சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த 6 பேர் கும்பல் பெண் சாமியாரை வழி மறித்து வம்பிழுத்து, கார் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பரமக்குடி காவல் சரக துணை கண்காணிப்பாளர், அலுவலகத்தில் பெண் துறவி சிப்ரா பதக் புகார் அளித்தார், தங்களை வழிமறித்தவர்களை கண்டு பயந்து காருக்குள் சென்று அமர்ந்ததாகவும், அவர்கள், ராமர் இங்கு இல்லை, அயோத்தியில் இருக்கிறார், இங்கு உனக்கு என்ன வேலை? ஸ்ரீராமரை தேடி அயோத்திக்கு செல்., என்று உரக்க சப்தமிட்டவாறே கார் மீது கல் வீசி தாக்கியதாக சிப்ரா பதக் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து 2 இன்ஸ்பெக்டர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சம்பவம் எங்கே நடந்தது? என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர். பெண் துறவியின் உறவினர்கள் இருவர் நீதிபதியாக இருப்பதாகவும் அவர்கள் நேரடியாக வருவதாகவும் கூறியுள்ளதால், இந்த புகார் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Comments