அதிக சம்பளத்தில் வேலை என ஆசைகாட்டி ரஷ்யாவுக்குக் கடத்தப்படும் இந்திய இளைஞர்கள்-சி.பி.ஐ
அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச்சென்று முறையாகப் பயிற்சி அளிக்காமல் உக்ரனைக்கு எதிரான போரில் அவர்களை ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சிலர் தங்களை ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்துச்சென்று மோசடி செய்ததாக, அந்நாட்டு ராணுவ உடையில் வீடியோ வெளியிட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அதில், டெல்லியைச் சேர்ந்த ஆர்.ஏ.எஸ் ஓவர்சீஸ் பவுன்டேசன் என்ற நிறுவனம், சுமார் 180 இளைஞர்களை ரஷ்யா அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அதிக சம்பளத்தில் வேலை என்ற ஆசை காட்டி, இந்த இளைஞர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை, மதுரை உட்பட 7 இந்திய நகரங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
Comments