அலறிய படியே திரும்பிய மாணவி.. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற 12 ஆம் வகுப்பு தேர்வெழுதி வந்தார்..!
எதாவது காரணம் கூறி தேர்வுக்கு மட்டம் போடும் சில மாணவர்கள் மத்தியில், விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் மரணச்செய்தி அறிந்தும், பொறுப்புணர்வோடு 12ஆம் வகுப்பு பொது தேர்வெழுதிவிட்டு , தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே ஓடி வந்த சம்பவம் திருவெண்ணய் நல்லூர் அருகே நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த கருவேப்பிலை பாளையத்தை சேர்ந்தவர் சுப்பராயலு. 51 வயது விவசாயியான இவர் மிளாகாய் ,கொத்தமல்லி வியாபாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இவருக்கு சுகந்தி, சுகுணா,சுமி, அபி, அனிதா என்று 5 மகள்கள் இருக்கும் நிலையில் கடைசி மகள் அனிதா சரவணம்பாக்கம் அரசு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு மடப்பட்டு பகுதியில் மிளகாய் வியாபாரத்துக்கு சென்ற சுப்பராயலு சைக்கிள் மீது பின் பக்கம் அதிவேகத்தில் வந்த இன்னோவா கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட சுப்பராயலு இரு கால்களும் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பராயலு பரிதாபமாக பலியானார். தங்களின் ஒரே ஆதரவான தந்தை பலியான தகவல் அறிந்து 5 மகளும் கதறித்துடித்தனர்.
இவர்களில் அனிதாவுக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இருந்த நிலையில் தந்தையின் உடலை கூட பார்க்க இயலாமல் மனதை தேற்றிக் கொண்டு ஆங்கில தேர்வுக்கு சென்றார்.
தேர்வு எழுதி முடித்த கையோடு அவரை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் உடலை காண பைக்கில் இருந்து குதித்து ஓடிச்சென்றார்
கண்ணீர் விடு கதறி அழுத அனிதாவுக்கு ஆறுதலாக அவரது தோழிகளும் அங்கு வந்தனர். தன்னை நன்றாக படிக்க வைக்க தந்தை ஆசைப்பட்டதாகவும், இனி தன்னை யார் படிக்க வைப்பார்கள் என மாணவி ஏக்கத்துடன் கதறி அழுதார்
சுப்பராயலுவின் 5 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அரசு உதவ வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்
Comments