தெருவில் விளையாடிய பாப்பா... சாக்கடை கால்வாயில் சடலமாக.. மூட்டை கட்டி வீசிய கொடூரம்..! கொதித்துப் போய் உறவினர்கள் மறியல்

0 1043

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுமியை கடத்தி கொலை செய்து, சடலத்தை மூட்டை கட்டி சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் நடத்திய மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே தெருவில் விளையாடச்சென்றார். மாணவி வீடு திரும்பாத நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தங்கள் மகளை காணவில்லை என்று பெற்றோர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து சிறுமி எங்கு சென்றார் ? என்னவானார் ? என்று தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

விரைந்து சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது உள்ளே மாயமான அந்த சிறுமி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம ஆசாமி சிறுமியை கடத்திச்சென்று கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடை கால்வாயில் வீசிச்சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுமியின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அதற்குள்ளாக சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீயாய் பரவ ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்

சிறுமியின் சடலம் கொண்டு கொல்லப்பட்ட வாகனத்தை துரத்திய படியே உறவினர்கள் அழுதபடி ஓடிச்சென்றனர்

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புள்ள கொலையாளிகளை கைது செய்ய கோரி மக்கள் முத்தியால் பேட்டை பிரதான சாலையில் அமர்ந்து 3 மணி நேரம் மறியல் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து முடங்கியது

சிறுமி காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான விவேகானந்தன், 19 வயதான கருணாஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து கார்பென்டர் வேலை செய்யும் விவேகானந்தனின் வீட்டிக்கு  அழைத்துச் சென்றதாக கைதான கருணாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நிலையில், அவர் சத்தம் போட்டதால் இருவரும் சேர்ந்து துன்புறுத்தி கொலை செய்து, கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச்சென்றது யார் ? எதற்காக அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து சந்தேகத்துகிடமான முதியவர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர் முழுக்க குழந்தை கடத்தல் வதந்தியால் பல்வேறு நபர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments