ஜாபருடன் கென்யா டூர்.. காங் - திமுக பிரமுகருக்கு சம்மன் அனுப்பத் திட்டம்.! போதைப் பொருளுடன் தங்கமும் கடத்தலா?
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் , அடிக்கடி கென்யா சென்று வந்ததைக் கண்டுபிடித்துள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்களை சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்
2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்டு சீல்வைத்த அதிகாரிகள், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை வழங்கி வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜாபர் சாதிக் அவரது நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி கென்யாவிற்குச் சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் ஜாபர் சாதிக் கென்யாவிற்கு சென்று வந்தது ஏன் ? அவருடன் பயணம் செய்தவர்கள் யார்? அங்கு யாரை சந்தித்தார் ? என்பது தொடர்பாகவும், கென்யாவிற்கு போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்றாரா ? அல்லது தங்கம் விற்பனை தொடர்பாக சென்றாரா? என்ற கோணத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் பல்வேறு அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சகோதரர் ஒருவரையும், திமுக பிரமுகர் ஒருவரையும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டே சென்னை போலீசாரால் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் , 10 வருடத்தில் ஜாபர்சாதிக், அரசியல்வாதிகள் முதல், சினிமா பிரபலங்கள் வரை நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது எப்படி ? என்பது குறித்தும் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
Comments