ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு காதுகளை கிழித்த சத்தம்..! பின்னணியில் இவர்களா ?

0 1025

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில்  நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காயம் அடைந்தவர்கள் கிழிந்த உடைகளுடன் காதுகளை பொத்திக் கொண்டு தவித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் 80 அடி சாலையில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகம் உள்ளது. இங்கு மதிய வேளையில் வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டேபிளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது

உணவகத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் மேஜைகள் தூக்கி வீசப்பட்டன

வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்கள் சிலர் ஆடைகள் கிழிந்து பலத்த காயங்களுடன் காதுகளை பொத்திக் கொண்டு அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.

உடனடியாக அங்கு திரண்ட மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். முதலில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் , அங்கு மர்ம நபர் ஒருவர் பையில் வைத்துச்சென்ற சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வெடிகுண்டு உள்ள பையை கொண்டு வந்த நபர் குறித்த விவரங்களை கண்டுபிடிப்பதற்காக அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையை முன்னெடுத்துள்ளது. நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்த குண்டு வெடிப்பு சம்பவம் மீண்டும் பெங்களூருவில் நிகழ்ந்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments