திமுக ஒன்றியச் செயலாளர் குண்டு வீசிக் கொலை.. வண்டலூரை அதிரவைத்த சம்பவம்..!

0 979

சென்னை அடுத்த வண்டலூரில், திமுக ஒன்றியச் செயலாளர் ஆராமுதன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஆராமுதன். வண்டலூர் மேம்பாலம் அருகே கட்சி அலுவலகம் வைத்துள்ள இவர், புதிதாக திறக்கப்படுவதாக இருந்த பேருந்து நிழற்குடையை பார்வையிடுவதற்காக தனது ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளார்

சரியாக புதிய பேருந்து நிழற்குடை அருகே கார் சென்று நின்றதும் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மிரண்டு ஓடியுள்ளனர். காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்த குண்டுகள் வெடித்த நிலையில், மிரண்டு போன ஆராமுதன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றபோது, மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியதில் கைதுண்டாக விழுந்தது. அப்படியும் தப்பி ஓடியவரை சுற்றி வளைத்து தலை, கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

உயிருக்கு போராடிய ஆராமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டனர்

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலை வைத்து கொலையை செய்தது கூலிப்படையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் , 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments