சாலையோரம் ஒதுங்கிய ஜோடி கத்திமுனையில் பெண் கடத்தல் தப்பி ஓடி விபத்தில் பலி... முட்டியில் சுட்டுப் பிடித்த போலீஸார்...
சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் காதலனை கத்தி முனையில் இருவர் மிரட்டி அவரது காதலியை தூக்கிச் சென்ற போது தப்பி ஓடிய பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர்களில் ஒருவனான ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஊரு விட்டு ஊரு வந்து வழிப்பறி, பாலியல் பலாத்கார முயற்சி, கொலை, 2 போலீஸ்காரர்கள் மீது கத்தி வெட்டு என அடுத்தடுத்து அரங்கேற்றியதால் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உதயபிரகாஷ் இவர் தான்.
சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவர் ரமேஷ். இவர் சென்னையில் பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த பவித்ராஸ்ரீ என்ற 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கிரிவலம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
வழியில், திண்டிவனம் அடுத்துள்ள கோனேரிக்குப்பத்தில் சர்வீஸ் சாலையில் ஒதுக்குப்புறமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே மறைந்திருந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரமேஷின் செல்ஃபோனை பறித்துக் கொண்டதோடு பவித்ராஸ்ரீயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
காதலனை கத்தி முனையில் ஒருவன் மிரட்டிக் கொண்டிருக்க தன்னிடம் அத்துமீறுபவனின் பிடியிலிருந்து விடுபட்ட பவித்ராஸ்ரீ, தப்பிக்க நினைத்து தேசிய நெடுஞ்சாலை நோக்கி வேகமாக ஓடினார்.
அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தில் மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார் பவித்ராஸ்ரீ. கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண்ணெதிரே காதலி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் ரமேஷ்.
இதற்குள் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடி விடவே, விபத்து தகவலறிந்து அங்கு வந்தனர் ஒலக்கூர் போலீஸார். ரமேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது நடந்ததை கூறவே தப்பியோடியவர்களை தேடத் துவங்கினர் போலீஸார்.
அவர்களில் ஒருவரான நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். கிரிவலம் வருபவர்களிடம் கொள்ளையடித்து ஜாலியாக இருக்கலாம் என தனது ஊரைச் சேர்ந்த உதயபிரகாஷ் தன்னை அழைத்து வந்ததாகவும் அதற்காகவே தாங்கள் இப்பகுதியிலேயே சுற்றி வந்ததாகவும் தெரிவித்தான் அந்த சிறுவன்.
இருட்டில் தனியாக இருந்த ஜோடியை தாங்கள் மடக்கிய போது தப்பி ஓடிய பெண் வாகனத்தில் அடிபட்டதாக சிறுவன் கூறியதைத் தொடர்ந்து உதயபிரகாஷை தேடும் பணியை தீவிரப்படுத்தினர் போலீஸார். இதற்கிடையில், கப்பியாம்புலியூர் ஏரிக்கரை அருகே இளைஞன் ஒருவன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே அங்குச் சென்றனர் போலீஸார்.
அந்த நபர் உதயபிரகாஷ் தான் என்பது உறுதியானதும் பிடிக்கப்பதற்காக நெருங்கிச் சென்றனர் எஸ்.எஸ்.ஐ. ஐயப்பன், காவலர் தீபன். அப்போது அவர்கள் இருவரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவரின் வலது முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார் உதவி ஆய்வாளர் மகாலிங்கம். காயமடைந்த 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாஜ், பிடிபட்ட சிறுவனை சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டிச் சென்று நடித்து காட்டச் செய்து விசாரணை நடத்தினார். விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி இருப்பதாகவும், சிகிச்சையில் உள்ள உதயபிரகாஷ் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர் போலீஸார்.
Comments