ரூ 4687 தான் கட்டனும்.. நடு வீட்டுல உட்காருவீங்களா இறப்புக்கு யாரு பதில் சொல்வா..? உயிரை வாங்கிய உஜ்ஜீவன் வங்கி ஊழியர்கள்

0 934

நாகர்கோவில் அருகே வங்கியில் வாங்கிய  80 ஆயிரம் ரூபாய் மகளிர் கடனுக்கு தவணை செலுத்தவில்லை என்பதற்காக வங்கி ஊழியர்கள் வீட்டுக்குள் அமர்ந்து அவதூறாக பேசியதால், மனம் உடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்

வங்கி ஊழியர்கள் அவதூறாக பேசியதால் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட செல்வன் இவர் தான்..!

நாகர்கோவில் அடுத்த மந்தாரம் புதூரை சேர்ந்தவர் செல்வன் . இவரது மனைவி ராதிகா தனது குடும்ப தேவைக்காக உஜ்ஜீவன் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாதம் 4687 ரூபாய் என மொத்தம் 24 மாதங்கள் கட்ட வேண்டும் என்ற நிலையில் 7 வது மாத தவணை தொகையை கடந்த 8ந்தேதி கட்ட தவறியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் தவணை தொகையை கேட்டதாகவும், தங்கள் குழந்தையின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு பணம் செலவாகி விட்டதாகவும் தற்போது கையில் பணமில்லை என்றும் தங்கள் நிலையை தெரிவித்துள்ளனர்.

இதை ஏற்காத வங்கி ஊழியர்கள் ராதிகாவிடம் எங்கள் வங்கியில் இருந்து பணம் வாங்கி சாப்பிடும் போது நன்றாக இருந்தது, அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் நீ ஏன் கடன் வாங்குகிறாய், பிச்சை எடுத்தாவது கொண்டு வந்து வாங்கிய கடனை கொடு என்று கூறியது மட்டுமல்லாமல் ராதிகாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரின் வீட்டின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்து பணத்தை தந்தால் மட்டுமே வெளியே செல்வோம் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகின்றது

ராதிகா தன்னுடைய கணவர் செல்வனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி இருக்கிறார். உடனே வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் உள்பகுதியில் அமர்ந்திருந்த வங்கி ஊழியர்களிடம் நீங்கள் வங்கிக்கு செல்லுங்கள், ஓரிரு தினங்களில் பணத்தை கட்டி விடுகிறேன் எனக் கெஞ்சிதாகவும், இதை ஏற்காத வங்கி ஊழியர்கள் வங்கியில் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் நீ எல்லாம் ஏன் நடமாடுகிறாய் உனக்கு எதற்கு ஒரு குடும்பம் என மனைவி முன் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகின்றது

இதனை பார்த்து மனம் நொந்து போன அவரது மனைவி பள்ளிக்கு சென்றுள்ள குழந்தைகளை அழைத்து வர சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கணவர் இல்லாத நிலையில் வங்கி ஊழியர்கள் மட்டும் வீட்டின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்ததால், சந்தேகம் அடைந்து உள்பக்க அறையில் சென்று பார்த்த போது, செல்வன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். கணவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சத்தமிட்டு கதறி அழுததால், வங்கி ஊழியர்கள் அங்கிருந்து நைசாக வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய செல்வனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்

செல்வனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் செல்வனின் உயிரிழப்புக்கு காரணமான உஜ்ஜீவன் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பிணவறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, உஜ்ஜீவன் வங்கியோ, தொடர்புடையதாக கூறப்படும் வங்கி ஊழியர்களோ பதில் அளிக்க மறுத்து விட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments