போலீஸா பயமே இல்லை.. போதையில் மளிகைக்கடை சூறை.. அதிமுக பிரமுகர் அட்டகாசம்..! செய்தியாளர்களுக்கும் பகிரங்க மிரட்டல்

0 656

சென்னை பழவந்தாங்கல் அருகே போதையில் விழுந்து கிடந்தவரை தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்ட பாவத்துக்கு மளிகைக்கடை உரிமையாளரிடம் செல்போன் எங்கே? என்று கேட்ட போதை ஆசாமி, கூட்டாளிகளை அழைத்து வந்து போலீசார் முன்னிலையில் மளிகைக் கடையை சூறையாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது

போலீசார் தடுத்தும் கேட்காமல் மளிகைக்கடை சூறையாடப்பட்ட காட்சிகள் தான் இவை..!

சென்னை நங்கநல்லூர் பாலாஜி நகர், வோல்டாஸ் காலனி பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் சக்திவேல் . அவரின் இரண்டு மகன்களும் கல்லூரிக்கு சென்று வந்த பிறகு சக்திவேலுக்கு மாலை நேரத்தில் உதவியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மளிகைக் கடை அருகே சாலையின் நடுவே மதுபோதையில் நிதானமின்றி கீழே விழுந்து கிடந்த ஒரு நபரை கண்டு பாவம் பார்த்து, மளிகைக் கடைக்காரரான சக்திவேல் தண்ணீர் கொடுத்து எழுப்பி சாலை ஓரமாக அமர வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தெளிந்தவுடன் கடைக்கு வந்த அந்த நபர், தனது செல்போனைக் காணவில்லை எடுத்தீர்களா என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டதால் கடையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார் சக்திவேல்.

கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்ற போதை ஆசாமி அவரது நண்பரான அதிமுக பிரமுகர் தனசேகர் என்பவருடன் 10 பேர் கும்பல் உருட்டுக்கட்டையுடன் வந்து கடை உரிமையாளரை மிரட்டினர். முன் எச்சரிக்கையாக அவர் அளித்த தகவலின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கடைக்கு வந்து அவர்களை தடுத்தனர். இருந்தும் அடங்காமல் அத்துமீறிய அந்த கும்பல் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியது.

போலீசார் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது ஒஇரு மகன்களையும் கடைக்குள் தள்ளி ஷட்டரை பூட்டியதால் அவர்கள் உயிர்தப்பினர்.

கடையின் வெளியே இருந்த சோடா பாட்டில்களை எடுத்து சாலையில் வீசி உடைத்துள்ளனர், சிறிது நேரத்தில் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

காவல் துறையினர் அதிமுக முன்னாள் நகர செயலாளர் தனசேகர், ரவி, அதிமுக 185 -வது வட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரகாஷ் , முருகேசன், சதீஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில் மேலும் ஒருவரான ஹரீஷ் என்பவரை தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து ஐந்து பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை, அதிமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது எனக் கூறி செய்தியாளரின் செல்போனை பிடுங்கி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து புனித தோமையார்மலை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வியாபாரிகளைப் பார்த்து ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்க வந்தவன் என்று கூறி தாக்குவது கஞ்சா போதையில் ரகளை ஈடுபடுவது மாமூல் கேட்பது என சமூக விரோதியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments