உண்மையிலேயே இறைவன் மிகப்பெரியவன் தான்.. அமீர்... தயாரிப்பாளரை தேடும் போலீஸ்..! ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்..

0 884

2000 கோடி ரூபாய் போதை பொருளை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டில் வைத்து கடத்திய வழக்கில் அமீர் படத்தின் தயாரிப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர் தான் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்படும் இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்..!

டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. 4 மாத தீவிர விசாரணை மற்றும் கள ஆய்வுக்குப் பிறகு, இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், டெல்லியில் இருப்பதும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்த முயற்சித்து வருவதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டு வருவதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கு சென்றனர்.

அதிரடியாய் குடோனுக்குள் நுழைந்த அவர்கள், தேங்காய் பொடி ஹெல்த் மிக்ஸ் பவுடருடன் சூடோபெட்ரைன் என்ற போதை பொருளை மறைத்து கடத்த முயன்ற 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதை பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப் பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்ர்

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என பிடிபட்ட மூன்று பேரிடம் விசாரித்த போது , தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் இந்த கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் சென்னை மண்டல அதிகாரிகளோடு சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இயக்குனர் அமீரை வைத்து இறைவன் மிகப்பெரியவன் என்ற பெயரில் படத்தை தயாரித்து வரும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருப்பது அம்பலமானது.

ஜாபர் சாதீக் கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இவர் கயல் ஆனந்தியை வைத்து மங்கை, உள்ளிட்ட படங்களையும் தாயாரித்துள்ளார்.

ஜாபர் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்த போலீசார் அவரை தேடிவருவதாக தெரிவித்தனர்.

மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருவதாகவும், சலீம் அரசியல் பிரமுகராக இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மூவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சினிமாவில் முதலீடு செய்து உள்ளதாக கூறப்படும் நிலையில் என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்து உள்ளார்கள். இவர்களுக்கு சினிமாவில் உறுதுணையாக இருப்பது யார்? சொத்துக்களாக எங்கெங்க சேர்த்து வைத்திருக்கிறார்கள்? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபருடன் சினிமாவைச் சேர்ந்த மற்ற நபர்கள் யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கிறது. இங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பு என்னென்ன என்பது குறித்தும் சைபர் கிரைம் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹவாலா மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே போலீசாரால் தேடப்படும் ஜாபர் சாதிக்கை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments