தங்கையின் காதல் கணவனை பாருக்கு அழைத்த அண்ணன் காத்திருந்த விபரீதம்... காதல் மணம் செய்வது குற்றமா..?
சென்னையில், தங்கையை காதலித்து சுய மரியாதை திருமணம் செய்துக் கொண்டவரை 4 மாதங்களுக்கு பிறகு சமாதானம் பேசுவதற்காக பாருக்கு அழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக அண்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தங்கையின் காதல் கணவனை வெட்டிக் கொலை செய்ததாக கைதான அண்ணன் மற்றும் அவனது கூட்டாளிகள் தான் இவர்கள்.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவரான மெக்கானிக் பிரவீன், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லடையாம் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதாலும் தங்களது எதிர்ப்பையும் மீறி திருமணம் நடந்ததால் பெண்ணின் குடும்பத்தார் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தங்களது திருமணத்தை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணமாக பதிவு செய்துக் கொண்டு அதே பகுதியில் குடித்தனம் நடத்தினர் தம்பதியர்.
இந்நிலையில், தனியார் மதுபான விடுதியின் வெளியே நின்றிருந்த பிரவீனை கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது குறித்து தகவலறிந்து அங்குச் சென்றனர் பள்ளிக்கரணை போலீஸார்.
படுகாயத்துடன் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார் பிரவீன்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவு காட்சிகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில் பிரவீனை, ஷர்மிளாவின் உடன் பிறந்த சகோதரனான தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரிய வந்தது.
தாம்பரம் அருகே மாம்பாக்கத்தில் பதுங்கியிருந்த தினேஷ், அவரது கூட்டாளிகளான ஸ்டீபன், ஸ்ரீராம், விஷ்ணு, ஜோதிலிங்கம் ஆகியோரையும் கைது செய்தனர் தனிப்படை போலீஸார்.
எதிர்ப்பையும் மீறி தங்கை ஷர்மிளாவை திருமணம் செய்துக் கொண்டதால் பிரவீனை பழிவாங்குவதற்காக இந்த கொலையை தினேஷ் மற்றொரு கும்பலுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
இந்த கொலையை யார் மூலமாக செய்து முடிக்கலாம் என தினேஷ் தேடிய போது, 2022 ஆம் ஆண்டு ஷாம் என்பவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரவீன் சிறையில் இருந்ததும் அவரை ஒரு கும்பல் தேடி வருவதும் தெரிய வந்தது.
எனவே, ஷாமின் நெருங்கிய நண்பனான ஸ்டீபனை சந்தித்து தங்கள் இருவருக்கும் பொது எதிரியாக உள்ள பிரவீனை கொலை செய்ய தான் உதவுவதாக தெரிவித்துள்ளார் தினேஷ்.
அதன்படியே, திட்டமிட்டு ஷர்மளாவின் அண்ணன் தினேஷ் பேச விரும்புவதாக கூறி பிரவீனை மதுபான பாருக்கு வரும்படி அழைத்துள்ளார் பிரவீனின் நண்பர்களில் ஒருவனான ஸ்ரீராம்.
மச்சான் சமாதானம் பேசுவதற்காக அழைக்கிறான் என்றதும் குஷியான பிரவீன், மனைவிக்காக வாங்கி வைத்திருந்த ப்ரைடு ரைஸ் பார்சலுடன் நண்பர்கள் மாசிலாமணி, சூர்யா ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார்.
பழி வாங்குவதற்காக மதுபாரின் வாசலிலேயே காத்திருந்த ஸ்டீபன் மற்றும் தினேஷ், அங்கு வந்த பிரவீனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டத் துவங்கினர். தடுக்க முயன்ற பிரவீனின் நண்பர்கள் இருவரையும் அந்த கும்பல் எச்சரித்து அனுப்பி விட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
பள்ளியில் துவங்கிய காதல் திருமணத்தில் முடிந்தாலும் ஜாதியை காரணம் காட்டி சொந்த அண்ணனே தனது கணவனே வெட்டிக் கொலை செய்து 4 மாதத்திலேயே தனது வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கண்ணீரோடு தெரிவித்தார் ஷர்மிளா.
Comments