டார்ச் அடித்து ரயிலை நிறுத்திய முதிய தம்பதி.. அதிகாலையில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..!

0 660

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிவந்த லாரி பகவதிபுரம்-கொல்லம் ரயில் தண்டவாளப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் இன்றி சென்ற பாலருவி சிறப்பு ரயிலை வயதான தம்பதி உள்பட 3 பேர் டார்ச் லைட் அடித்து நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று அதிகாலையில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் பாரம் ஏற்றி வந்த லாரி, தமிழக-கேரள எல்லையான எஸ் வளைவு பகுதியில், பகவதிபுரம் - கொல்லம் ரயில் பாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகளின்றி பாலருவி சிறப்பு ரயில் அந்த வழித் தடத்தில் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே விபத்து குறித்து அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகளான வயதான தம்பதியினர் ரயில் வருவதை அறிந்து தண்டவாளத்திற்கு ஓடிச் சென்று டார்ச் லைட்டை காட்டி அந்த ரயிலை நிறுத்தினர். இதனால், அந்தப் பாதையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலேயே நிறுத்திவைக்கப்பட்டு 3மணிநேர கால தாமதத்திற்கு பின் புறப்பட்டுச் சென்றது. மேலும் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments