ஆண் டி.வி. தொகுப்பாளரை காதலித்துக் கடத்திய திரிஷா! கைதில் முடிந்த கல்யாண கனவு!
5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தி வரும் 31 வயது பெண் தொழிலதிபர் ஒருவர், பிரபல தொலைக்காட்சி ஆண் தொகுப்பாளர் ஒருவரை திருமணம் செய்யும் ஆசையில் கடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன் திருமணத்துக்காக மேட்ரிமோனி இணைய தளம் ஒன்றில் மாப்பிள்ளை தேடிய ஐதராபாத்தைச் சேர்ந்த போகிரெட்டி திரிஷாவுடன் அறிமுகமானார், சைதன்ய ரெட்டி. 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உரிமையாளரான திரிஷாவுக்கு சைதன்ய ரெட்டியின் ப்ரொஃபைல் புகைப்படங்களை பார்த்ததும் பிடித்துப் போனதாக கூறப்படுகிறது.
2 ஆண்டுகளாக இருவரும் காலிங் மற்றும் சாட்டிங் செய்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமது பிஸினசில் முதலீடு செய்யுமாறு திரிஷாவிடம் சைதன்யா கூறியதாகவும், அதன் பேரில் திரிஷா யூ.பி.ஐ. மூலம் 40 லட்ச ரூபாய் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்ற மறுநாளே சைத்தன்ய ரெட்டி திரிஷாவை பிளாக் செய்ததாக கூறப்படுகிறது.
சைத்தன்ய ரெட்டியை எப்படி தொடர்பு கொள்வது எனத் தெரியாமல் தவித்த திரிஷா, அவரது மேட்ரிமோனி ப்ரொஃபைலுக்கு சென்று தேடிய போது, அதில் வேறொரு மொபைல் எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டதும், அதில் தெலுங்கு மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளரான பிரணவ் சிஸ்லா பேசியுள்ளார்.
சைத்தன்ய ரெட்டி பற்றி விசாரித்த திரிஷாவிடம், மோசடி நபர் ஒருவர் தமது புகைப்படங்களை பயன்படுத்தி போலி மேட்ரிமோனி கணக்கு உருவாக்கி இருப்பதை அறிந்து விளக்கிய பிரணவ், இதுபற்றி ஐதராபாத் சைபர் செல்லில் தாம் புகார் செய்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு, 40 லட்ச ரூபாய் பறி போனது கூட பரவாயில்லை, ஆனால் தான் விரும்பியது புகைப்படத்தில் இருந்த பிரணவைதான் என்று தெரிவித்த திரிஷா, தன்னை மணந்து கொள்ள வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திரிஷாவின் எண்ணை பிளாக் செய்துள்ளார், பிரணவ்.
அதன் பிறகும் பிரணவ் மீதான காதலை கைவிட மனமில்லாத திரிஷா, தமது அலுவலத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப நிபுணர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பிரணவின் காரில் ஆப்பிள் ஏர்-டேக் என்ற ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, அவரது நடமாட்டத்தை கண்காணித்து ஆட்களை வைத்து கடத்தியதாக கூறப்படுகிறது. திரிஷாவின் அலுவலகத்துக்கு பிரணவை தூக்கிச் சென்ற அவர்கள், முதலாளியம்மா எப்போது கால் செய்தாலும் எடுத்துப் பேச வேண்டும், எங்கே கூப்பிட்டாலும் சென்று பார்க்க வேண்டும் என்று மிரட்டி அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
உதை தாங்க முடியாமல் அவர்கள் சொன்னதை எல்லாம் ஒப்புக் கொண்ட பிரணவ், அவர்கள் பிடியில் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் திரிஷா மற்றும் கடத்தலில் அவருக்கு உதவிய அடியாட்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments