தாறுமாறாக சாலையில் காரை ஓட்டி விபத்து தப்பிய எம்.பி மகன்..! போலீஸ் நிலையத்திலும் ரகளை
மாமல்லபுரத்தில் இருந்து குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று இருசக்கர வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் இடித்து தள்ளியதாக தமிழக மாநிலங்களவை எம்.பி ஒருவரின் மகன் செங்கல்பட்டு போலீசாரிடம் சிக்கினார்.
மாமல்லபுரம் பகுதியில் இருந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியபடியே சென்ற காரை செங்கல்பட்டு நகரப்பகுதியில் வைத்து இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றனர். நிற்காமல் சென்ற அந்த காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். காருக்குள் போதையில் தள்ளாடிய படி தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருவரும், இரு மாணவிகளும் இருந்தனர்
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திமுக மாநிலங்களவை எம்.பி கிரிராஜனின் மகன் செந்தமிழன் என்பதும் அவர் பொத்தேரியில் உள்ள கல்லூரியில் சட்டப்படிப்பு இறுதியாண்டு பயின்று வருவதும் தெரிய வந்தது. காவல் நிலையத்தில் மேஜையை அடித்து ரகளை செய்ததால் செந்தமிழ் உள்ளிட்ட 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி போதை தெளிந்தபின் விசாரணை மேற்கொண்டனர்.
பல மட்டத்தில் இருந்தும் வந்த சிபாரிசுகளால் அவர்கள் வந்த வாகனத்தை மட்டும் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்ட போலீசார், அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. இதே போல சாதாரண நபர்கள் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் போலீசார் விடுவிப்பார்களா? என்று அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்
செந்தமிழன் ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்துக்குள்ளானவர்களில் 2 வதாக ஒருவர் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள கிரிராஜன் எம்.பி, இறுதி ஆண்டு என்பதால் தனது மகன் மாமல்லபுரத்துக்கு சென்று சாமிகும்பிட்டு விட்டு நண்பர்களுடன் செங்கல்பட்டு வழியாக திரும்பிய போது இரு சக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றதால் சிலர் கல்வீசி தாக்கியதாகவும், இதனால் தன் மகன் தான் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், அவன் மது அருந்தவில்லை என்றும் அதனால் போலீசார் அவனை மருத்துவபரிசோதனைக்கு அனுப்பவில்லை என்றும் கூறி உள்ளார். மேலும் இருதரப்பும் சமாதானமாக சென்று விட்டதால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் கிரிராஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எம்.பி மகன் செந்தமிழை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த உதவி ஆய்வாளர் டெல்லி விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
Comments