இதெல்லாம் விஜய்க்கு தெரியுமா ? இலவச ஆம்புலன்ஸ் சேவையில் ஸ்டிக்கர் ஒட்டி டுவிஸ்ட் வைத்த ரசிகர்..! புஸ்ஸி ஆனந்துக்கே அல்வா கொடுத்த சம்பவம்

0 916

நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புஸ்ஸி ஆனந்தால் அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் இரண்டே நாட்களில் மாயமான நிலையில், ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்து ஸ்டிக்கர் ஒட்டி நிர்வாகி ஒருவர் நடத்திய விளம்பர நாடகம் அம்பலமாகி உள்ளது

பெருமழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நெல்லை தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரடியாக வந்து சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவர் சபின் சார்பில் நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் சேவையை தற்போதைய த.வெ.க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

விஜய் மக்கள் இயக்கம் இலவச ஆம்புலன்ஸ் வழங்கி இருப்பதாக சமூக ஊடங்களில் விஜய்யின் பின்னனி பாடலுடன் அந்த வீடியோ வைரலானது.

அந்த இலவச ஆம்புலன்ஸ் தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மாயமானது . இது குறித்து நெல்லை , தூத்துக்குடி மாவட்ட அ.இ.த.வி.ம.இ நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது முறையான தகவல் இல்லை. இதற்கிடையே மாயமான ஆம்புலன்ஸ் கன்னியாகுமரியில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வருவது தெரியவந்தது

இதனையடுத்து மற்ற நிர்வாகிகள் விசாரணையில் இறங்கிய போது, அந்த ஆம்புலன்ஸை இயக்க நிர்வாகியான சபின் , விஜய்யின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரிடம் 2 நாட்கள் வாடகைக்கு வண்டியை எடுத்து வந்து அதில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரதிற்காக நெல்லை தூத்துக்குடி மக்கள் சேவைக்கு அர்பணிப்பது போல புஸ்ஸி ஆனந்தை வைத்து தொடங்கி வைத்து நாடகமாடியது அம்பலமானது

தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் விஜய் ஸ்டிக்கரை ஒட்டி இயக்குவதை அறிந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவர், தனது ஆம்புலன்ஸை 2 நாளில் எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. புஸ்ஸி ஆனந்தையே நம்பவைத்து ஏமாற்றியதாக தெரிவித்த நிர்வாகிகள் , ஆம்புலன்ஸ் நாடகம் குறித்து தலைமைக்கு புகாரும் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments