ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டியதால் உண்டான களேபரம்..!

0 466

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டு உரிமையாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு அடிதடி, தீ வைப்பு, தடியடி என களேபரத்தில் முடிந்தது. 

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த உலிபுரத்தில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் என போட்டி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காளைகள் முட்டியதில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உடனடியாக அவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென களத்துக்குள் நுழைந்த மாட்டு உரிமையாளர் ஒருவர், தனது மாட்டை ஏன் பிடிக்கிறாய் எனக் கேட்டு வீரர் ஒருவரை தாக்கினார்.

சக மாடுபிடி வீரர்கள் இதனைத் தட்டிக்கேட்கவே அங்கு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது மர்ம நபர் களத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாருக்குத் தீ வைத்துள்ளார்.

தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

மாடுபிடி வீரரைத் தாக்கிய மாட்டின் உரிமையாளர்தான் தீ வைத்ததாகக் கூறி, அங்கிருந்தவர்கள் அவரை விரட்டி விரட்டி சரமாரியாகத் தாக்கினர்.

இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. போலீசார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இந்தக் களேபரத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக விழாக் குழுவினர் அறிவித்த நிலையில், பல்வேறு ஊர்களிலிருந்து மாடுகளை அழைத்து வந்திருந்தவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாடுபிடி வீரர் ஒருவர் களத்திலேயே சாஷ்டாங்கமாக விழுந்து போட்டியை நிறுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

டோக்கன் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கோட்டாட்சியர் மைக்கில் அறிவித்ததை ஏற்காமல் அவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments