1000 நாள் சிறைவாசம்.. ஒரு வழியாக கிடைத்த ஜாமீன்.. ஹரி நாடார் பராக்..! மொத்த தங்கமும் போச்சாம்..!
மோசடி வழக்கில் சிக்கி சுமார் 1000 நாட்களுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹர சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கிலோ கணக்கில் நகைகளோடு சிறைக்கு சென்றவர் பொட்டு தங்கமின்றி வெளியே வரும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஒரு காலத்தில் கழுத்து நிறைய நகைகளுடன் வலம் வந்த ஹரி நாடார், 2021சட்டமன்ற தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்ற சூட்டோடு சூடாக மாயமானார். பெங்களூரை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரிடம் கடன் வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹரி நாடார் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் தமிழக போலீசார் மேலும் 4 வழக்குகளில் அவரை அடுத்தடுத்து கைது செய்தனர். அந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் கிடைத்தாலும், பெங்களூரு வழக்கில் இருந்து ஜாமீன் கிடைக்காமல் பரிதவித்தார். கிலோ கணக்கில் நகைகளுடன் ஹரி நாடாரை கைது செய்த போலீசார், அவரது மொத்த நகைகளையும் பறிமுதல் செய்து வழக்கில் சேர்த்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு நாட்கள் நீண்டு கொண்டே போனதால் ஹரி நாடாருடன் இருந்த பலரும் அவரை விட்டு விலகினர், பனங்காட்டுப்படை கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரது காதல் மனைவி மஞ்சு மட்டும் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சுமார் 1000 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு பெங்களூரு நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இரு தினங்களில் இருந்து சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகின்றது. கழுத்து மற்றும் கைகள் நிறைய நகைகளோடு கைதான ஹரி நாடார் தற்போது பொட்டுத்தங்கம் கூட இல்லாமல் வெளியே அனுப்பி வைக்க இருக்கின்றது பெங்களூரு போலீஸ்..!
Comments