விஜயகாந்த் மச்சானிடம் 48 வீடுகள் ஆசை காட்டி ரூ.43 கோடி அபேஸ்.. மொத்தமாக ரூ.172 கோடி சுருட்டலாம்..! பில்டப் கொடுத்த பில்டர் மீது குவியும் புகார்கள்
சென்னை மாதவரத்தில் லோகா பில்டர் நிறுவனம் மொத்த குடியிருப்பையும் முழுமையாக கட்டி முடிப்பதற்குள்ளாகவே பலரிடம் விற்பனை செய்து 172 கோடி ரூபாய் வரை சுருட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான எல்.கே.சுதீஷுக்கு சொந்தமான இடம் ஒன்று மாதவரம் மெயின் ரோட்டில் இருந்தது. இதில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி விற்பதற்கு லோகா பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகின்றது.
3 ஆண்டுகளில் கட்டுமானத்தை முழுமையாக முடித்து மொத்தமாக கட்டப்படும் 250 வீடுகளில் 78 வீடுகளை எல்.கே.சுதீஷின் பங்கிற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் கொரோனாவை காரணம் காட்டி கட்டுமானம் நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் கட்டுமானம் நடந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானத்தை முடிக்காமல் இழுத்தடித்ததோடு, எல்.கே சுதீஷுக்கு கொடுக்க வேண்டிய 48 வீடுகளை வேறு நபர்களுக்கு விற்றதாக கட்டுமான நிறுவனத்தின் மீது எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர் லோகா கட்டுமானநிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா அவரது உதவியாளர் சாகர் ஆகியோர் மத்தியகுற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஒட்டு மொத்தமாக வீடுகளை முழுவதுமாக கட்டி முடிக்காமல் பலருக்கு அதனை விற்று பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக லோகா பில்டர்ஸ் அதிபர் சந்தோஷ் சர்மா மீது வீடு வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்
இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒவ்வொரு வீட்டிற்கும் 90 சதவீத பணத்தை வாங்கிக் கொண்ட லோகா பில்டர்ஸ் நிறுவனம் 211 பேரிடம் 80 லட்சம் முதல் 90 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 172 கோடி ரூபாய் வசூலித்த பணத்தில் போரூர் மற்றும் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்று லாபம் பார்த்து விட்டனர் என்று ஆதங்கம் தெரிவித்தனர்
லோகா பில்டர்ஸ் மோசடி தொடர்பாக கடந்த ஆண்டே தாங்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பதாகவும், தங்கள் புகார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.
Comments