ஒரு வேலையும் நடக்கல.. ஹெல்த் இன்ஸ்பெக்டரை ஒரு பிடி பிடித்த கலெக்டர்..! அதிரடி ஆய்வால் அதிர்ந்த ராசிபுரம்
ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, கடைகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றியதோடு, ஆவணங்களை சரிவர பராமரிக்காத அரசு ஊழியர்களை கண்டிந்து கொண்டார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ராசிபுரம் அடுத்த பழந்தினிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊராட்சியின் கணக்கு வழக்குகளை பார்த்த போது ஊராட்சி அதிகாரி பதில் கூற முடியாமல் திகைத்து நின்றார்
மாவட்ட ஆட்சியரை சந்தித்த தூய்மை பணியாளர் ஒருவர் தனக்கு மாத ஊதியம் வழங்கவில்லை என கூறியதால் ஏன் சம்பளம் வழங்கவில்லை ? என கேட்டதோடு, தூய்மை பணியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். சுழற்சி முறையில் ஆவணங்களை ஆய்வு செய்ய தவறிய அதிகாரிகளையும் கடிந்து கொண்டார்
ராசிபுரம் மார்க்கெட்டிற்கு சென்று அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்தார்
தொடர்ந்து கடை வீதிகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை மூடி வைக்க அறிவுறுத்தியதோடு, பிளாஸ்டிக் பைகளையும் கைப்பற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தவறிய சுகாதார அலுவலரை கடிந்து கொண்டார்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆட்சியர் உமா, அங்கு பணியில் இருந்த ஆர்த்தோ மருத்துவரிடம், உங்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றி ஒருவாரம் ஆகிறதே ஏன் அங்கு செல்லவில்லை ? என்று கேட்டதோடு, உடனடியாக பொது மருத்துவரை இங்கு பணி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்து அவற்றை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினார்
நாங்கல்லாம் வெயில்ல்ல கருத்துட்டோம் ஆனால் நீங்க... அப்படியே இருக்கீங்க என்று தலைமுடி கலையாமல் நின்ற மாநகராட்சி ஆணையரை கலாய்த்த ஆட்சியர், உங்கள் பகுதியில் ஏராளமாக பிளாஸ்டிக் பைகள் எடுத்துள்ளோம் கொஞ்சம் ஸ்ரிக்ட்டா கவனிங்க என்று அறிவுறுத்தினார்
அங்குள்ள மகளிர் காவல் நிலையத்துக்குள் சென்று பார்வையிட்ட அவர் சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என்று கேட்க , போலீசார் விழித்தனர். எஸ்.பியிடம் இது குறித்த பதிவுகளை பெற்று அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுச்சென்றார்
Comments