திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. குழந்தை கடத்தல் சர்ச்சை..!

0 730
திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. குழந்தை கடத்தல் சர்ச்சை..!

சென்னையில், இரவில் தனியாக நடந்து சென்ற திருநங்கையை குழந்தை கடத்துபவர் என நினைத்து அரை நிர்வாணப்படுத்தி, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம் நடந்தேறி உள்ளது.

குழந்தை கடத்துபவர் என நினைத்து திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து தாக்குதல் நடத்தியதற்காக கைதானவர்கள் தான் இவர்கள்.

சென்னை துரைபாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் திருநங்கை ஒருவர். தான் தங்கியிருக்கும் பம்பல் மூங்கில் ஏரி பகுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த திருநங்கை.

தெருவில் நின்று கொண்டிருந்த சிலர், திருநங்கையின் பேச்சு மற்றும் உருவ வேறுபாட்டால் அவரை குழந்தை கடத்துபவர் என்று நினைத்து விசாரித்துள்ளனர்.
தான் இப்பகுதியிலேயே வசித்து வருவதாகத் தெரிவித்தும் அதனை ஏற்காமல் கயிறால் திருநங்கையை அங்கிருந்த மின்கம்பத்தோடு சேர்த்து கட்டியது அந்த கும்பல். குழந்தை கடத்தல்காரர் பிடிபட்டதாக தகவல் பரவியதாக கூறப்படும் நிலையில், அங்கு திரண்ட மற்றவர்களும் திருநங்கையை சரமாரியாக தாக்கியதோடு, அவரது முடியை பிடித்து இழுத்தும், மேலாடையைக் கழற்றி அரை நிர்வாணப்படுத்தியும் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

திருநங்கையின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை ஒருவர் எடுத்துக் கொள்ள மற்றவர்கள் தங்களது தாக்குதலை தொடர்ந்தனர். வலி தாங்காமல் திருநங்கை கதறவே சங்கர் நகர் போலீஸிற்கு தகவல் தெரிவித்தார் அங்கிருந்தவர்களில் ஒருவர். விரைந்து சென்று, மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த திருநங்கையை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் போலீஸார்.

இதற்கிடையில், திருநங்கை தாக்கப்பட்ட வீடியோ அப்பகுதியில் பரவத் துவங்கியதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த வீடியோ பதிவு அடிப்படையில் பம்மலைச் சேர்ந்த 22 வயதான நந்தகுமார், 42 வயதான முருகனை கைது செய்தனர்.

கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்திச் சென்று உயிருடன் அவர்களது உடலுறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சென்னையில் பரவி வந்தது. இந்த குழந்தை கடத்தல் கும்பல் சென்னையில் சுற்றி வருவதாகவும் வதந்தி பரப்பப்பட்ட நிலையில் அதனை போலீஸார் மறுத்து வந்ததோடு, வதந்தி பரப்ப வேண்டாம் என எச்சரித்து வந்தனர்.

போலி வீடியோவில் வந்தவரைப் போன்றே திருநங்கையும் உடை அணிந்திருந்ததால் அவரை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து அப்பகுதியினர் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

குழந்தை கடத்தல் வீடியோ போலியானது என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதால், இந்த வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என காவல்துறை மீண்டும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியுள்ளது.

 இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும், மோகன், அசோக்குமார் ஆகிய இரண்டு பேரை செய்துள்ள போலீசார் எஞ்சிய சிலரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments