சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

0 624

சினேகம் என்ற ஒரே பெயரில் இருவர் நடத்தி வந்த அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்ற தகராறில், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டதன் பின்னனி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தனது பெயரிலேயே ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் திரைப்பட பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன். கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை காவல் ஆணையரகத்தில் நடிகையும் பா.ஜ.க மகளிரணி நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது புகாரளித்தார் சினேகன். தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதால் தனக்கும் அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாக புகாரில் தெரிவித்திருந்தார் சினேகன்.

தான் 'சிநேகம் பவுண்டேஷன்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருவதாகவும் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் ஜெயலட்சுமி. எனவே, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் திருமங்கலம் போலீஸார்.

தங்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர் இருதரப்பினரும். அதில், சினேகன் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜெயலட்சுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஜெயலட்சுமியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்க்கவும் நீதிபதி உத்தரவிட்டதால், உதவி ஆணையர் வரதராஜன் தலைமையிலான போலீசார் நேரடியாக ஜெயலட்சுமி வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தி அதனடிப்படையில் அவரை கைது செய்தனர்.

போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட ஜெயலட்சுமி, பா.ஜ.க நிர்வாகியாக இருப்பதால் மட்டுமே தன்னை கைது செய்திருப்பதாக கூறினார்.

இந்த பிரச்னை குறித்து சமாதானம் பேசுவதற்காக 3 முறை ஜெயலட்சுமியை அழைத்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டதால் நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவித்தார் சினேகன்.

நீதிபதியிடம் ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவ பரிசோதனைக்காக ஜெயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். தான் தவறு செய்ததற்கான ஒரு ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், பாஜக என்ற ஒரே காரணத்துக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ஜெயலட்சுமி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments