காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கேத்தம் பாளையத்தில் அதிகாலை வேளையில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன், கூச்சலிட்ட பெண்ணை கழுத்தை நெரித்து கொல்லமுயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இருட்டு நேரத்தில் கதவை திறந்து போட்டு வெளியே சென்றதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
அதிகாலையில்.. இருள் சூழ்ந்த வேளையில் ... வீட்டின் கதவை திறந்து போட்டு விட்டு வெளியே செல்லும் அவசர வேலைக்காரரா நீங்கள்..? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான்..!
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கேத்தம்பாளையத்தை சேர்ந்த எல்.ஐ.சி ஏஜெண்ட் நடராஜ். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை வீட்டின் முன்பக்க வாசல் கதவை பூட்டாமல் திறந்து போட்டு அவசர வேலையாக வெளியே சென்றார் நடராஜ். இதனை இருட்டுக்குள் பதுங்கி இருந்து நோட்டமிட்ட முகமூடி ஆசாமி ஒருவன், கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்ததும் அங்கு கட்டிலில் படுத்திருந்த நடராஜ் மனைவி காஞ்சனா கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அவரை நோக்கி ஓடி வந்த முகமூடி ஆசாமி வாயை பொத்தியதுடன், திமிறிய அவரை கழுத்தை நெரித்துள்ளான்
தாயின் அலறல் சத்தம் கேட்டு இளையமகன் உள்பக்க அறையில் இருந்து ஓடி வருவதை கண்டதும், முகமூடி ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினான். கதவை வெளிபக்கம் பூட்டிச்செல்ல முயன்ற நிலையில் உடனடியாக கதவை திறந்து கொண்டு அவனை விரட்டினர். சத்தம் கேட்டு ஓடிவந்த நடராஜனும் , அந்த முகமூடி ஆசாமியை விரட்ட அவன் அவரை தள்ளி விட்டு தப்பி ஓடி இருட்டுக்குள் மறைந்தான்
உடனடியாக வீட்டில் பொறுத்தப்பட்டு இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னதாக அவன் சில மணி நேரம் வளாகத்திற்குள் துணி காயப்போட்ட கயிறுகளை அறுத்ததும் சிசிடிவி காமிராக்களை திசை மாற்றி வைத்ததும் தெரியவந்தது.
கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் தான் அணிந்திருந்த முகமூடி கையுறை மற்றும் உடைகளை தேடி மோப்ப நாய் வந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றை தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். தனி வீடு அல்லது தோட்டத்து வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர், சிசிடிவி வைத்திருப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு வீட்டின் கதவுகளை அதிகாலை வேலையில் உள்பக்கம் பூட்டி வைத்திருப்பதும் அவசியம் என்கின்றனர் காவல்துறையினர். தங்கள் அவசர தேவைகளுக்கும், தொழில் சார்ந்த பணிகளுக்கும், அதிகாலை வேளையில் வீட்டை விட்டு வெளியில் சென்றால் , வீட்டிற்குள் இருப்பவர்கள் கதவை உட்பக்கமாக பூட்டிச்செல்வது அவசியம் இல்லையெனில், இது போன்ற முகமூடி ஆசாமிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வழி அமைத்து கொடுத்தது போலாகி விடும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
Comments