வைகை மேல.. கைவைத்த எலியார் லக்கேஜோடு லட்டும் போச்சு.. எக்ஸ்பிரஸ் ரெயிலில் வித்அவுட்..!
சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டியில் பயணிகளின் உடமைகளை எலிகள் கடித்துக் குதறுவதாக புகார் எழுந்துள்ளது, லக்கேஜையும், லட்டையும் வேட்டையாடிய எலியார் காமிராவில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
எலி நடமாட்டம் மற்றும் லட்டுவை பார்த்ததும் ஏதோ மிட்டாய்க் கடைக்குள் எலி புகுந்து விட்டதோ என்று நினைத்து விடாதீர்கள்... வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளில் லக்கேஜுகளில் கைவைத்த எலியார் இவர் தான்..!
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியின் C3 ஏசி பெட்டியில் பயணிகளில் உடமைகளை வேட்டையாடும் வகையில் பெருச்சாளிகள் ஆங்காங்கே சுற்றிதிரிந்துள்ளன. இதனை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்த பெருச்சாளிகள் பயணிகளின் உடமைகளையும், உணவுப்பொருட்களையும் கடித்து சேதப்படுத்தியுள்ளன. திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் முடிந்து சிரமப்பட்டு வாங்கிவந்த லட்டு பிரசாதத்தையும் எலிகள் கடித்துக் குதறின.
பயணி ஒருவரின் பை முழுவதையும் எலிகள் கடித்து சேதப்படுத்தியதால் ரயிலில் பயணித்தவர்கள் தங்கள் உடமைகளை கண்டு கடும் மன உளைச்சல் அடைந்தனர்
ஏ.சி பெட்டியிலேயே எலிகள் இவ்வளவு சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையில், மற்ற பெட்டிகளில் எலிகள் ராஜ்ஜியமே நடத்துவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் பயணிகள். ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயிலில் வித்அவுட்டில் வலம் வந்து உடமைகளை வேட்டையாடும் எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருக்கைக்கு அடியில் சிதறிக்கிடக்கும் தின்பண்டங்களை சாப்பிட வரும் எலிகள், பயணிகள் சாப்பிட்டு விட்டு பெட்டிக்குள்ளேயே தூக்கிப்போடும் பொட்டலங்களில் உள்ள மிச்ச மீதியை சாப்பிட அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவதாகவும் , ரெயிலை தூய்மையாக வைத்திருந்தாலே எலிகள் வராது என்கின்றனர் ரெயிவே அதிகாரிகள்.
Comments