காதலியோடு தனிமை சந்திப்பு... அடித்து விரட்டப்பட்ட காதலன்.. இளம்பெண்ணை தூக்கிய 2 பேர்.. திரண்ட ஊர்மக்களால் தப்பிய மாணவி

0 1050

கன்னியாகுமரி அருகே இரவு நேரத்தில் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஐ.டி ஊழியரை அடித்து துரத்தி விட்டு அவரது காதலியை தூக்கிச் சென்று அத்துமீற முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் பி.டெக் முடித்து விட்டு வீட்டில் இருந்தபடியே ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரும், 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் 19 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர்.

தனிமையில் சந்திக்க விரும்பிய இருவரும் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொத்தவிளை கடற்கரையை தேர்வு செய்தனர்.

வீட்டிலிருந்து இரவு 9:30 மணிக்கு மேல் கிளம்ப வேண்டியிருந்ததால், குடும்பத்தினருக்கு சந்தேகம் வரக் கூடாது என நினைத்த அந்த மாணவி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தன் தம்பியோடு வெளியே செல்வதாகக் கூறி மொபட்டில் அழைத்துச் சென்றுள்ளார். தம்பியை மொபட் அருகே நிற்க சொல்லி விட்டு காத்திருந்த காதலனுடன் கைகோர்த்தபடி கடற்கரைக்கு சென்றார் அந்த மாணவி.

உற்சாகமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த காதலர்கள் முன் திடீரென ஆஜரான இரண்டு இளைஞர்கள், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

தாங்கள் காதலர்கள் எனவும், தங்களை விட்டுவிடுமாறும் ஜோடியினர் கெஞ்சியும் இளைஞர்கள் அதனை பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இளைஞர்களின் அத்துமீறல் தொடரவே, அவர்களில் ஒருவரது செல்ஃபோன் எண்ணை பெற்று கூகுள்பே மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் அனுப்பியுள்ளார் அந்த ஐ.டி. ஊழியரான காதலன்.

அதன் பின்னரும் விடாத இளைஞர்கள், காதலனை தாக்கி விரட்டிவிட்டு, இளம்பெண்ணணிடம் அத்துமீற முயன்றுள்ளனர்.

அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சியும் விடாததால், காதலன் ஓடிச்சென்று அருகிலுள்ள கிராமத்தில் தகவல் தெரிவிக்கவே மக்களில் சிலர் திரண்டு வந்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி வருவதைப் பார்த்ததும் அந்த பெண்ணை அலங்கோலமான நிலையில் விட்டு விட்டு தப்பிச் சென்றனர் அந்த இளைஞர்கள்.

சுசீந்திரம் காவல் நிலையத்தில் காதலன் அளித்த புகாரைத் தொடர்ந்து, பணம் அனுப்பப்பட்டிருந்த கூகுள் பே எண் மூலமாக விசாரணை நடத்தினர் போலீஸார். அதில், பள்ளம் பகுதியைச் சேர்ந்த லியோராஜ், சகாய சீமோலியன் ஆகியோர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வரவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர் போலீஸார்...

வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதாமல் நடந்த சம்பவம் குறித்து புகாரளித்ததால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீஸார், பெற்றோருக்குத் தெரியாமல் பெண்கள் இரவில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments