ஒழுக்கமாக நடந்த 'குறும்புக்காரன்'..! இன்சாட் 3 டி.எஸ். கோளை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ..!!
பேரிடர் மற்றும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளை குறும்புக்காரன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட் அதன் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.
சரியாக மாலை 5-35 மணி! இருபத்தி ஏழரை மணிநேர கவுண்ட்டவுன் முடிவடைந்து ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி. எஃப். 14 ராக்கெட்.
திட்டமிட்ட பாதையில் பயணித்த ராக்கெட், வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இன்சாட் 3 டி.எஸ். செயற்கைக் கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.
செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டதும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இன்சாட் 3 டி.எஸ். செயற்கைக்கோளின் சூரிய ஒளித் தகடுகள் சரியாக இயங்குவதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.
ஒரு சில முறை எதிர்பார்த்தபடி செயல்படாமல் போனதால் குறும்புக்காரன் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அழைக்கும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட் இந்த முறை ஒழுக்கமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார், திட்ட இயக்குநர் டாமி ஜோசப்.
2 ஆயிரத்து 274 கிலோ எடை கொண்ட இன்சாட் 3 டி.எஸ். செயற்கைக் கோளில் வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் 25 வகையான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இதுதவிர பூமியின் தரைப்பகுதியிலிருந்து 70 கிலோ மீட்டர் வரை ஒவ்வொரு 40 அடியிலும் என்ன வெப்பநிலை இருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கிடக் கூடிய இன்சாட் 3 டி.எஸ்., பூமியிலிருந்து 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு காற்றில் உள்ள ஈரப்பதம் எவ்வளவு என்பதையும், ஓசோன் படலத்தின் நிலையையும் தானியங்கி அமைப்பின் மூலம் ஒருங்கே திரட்டி அனுப்பும்.
பூமியில் ஏற்படும் மாற்றங்களான நிலநடுக்கம், கடல் மட்ட அதிகரிப்பு, பனிச்சிதைவு, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிஸார் செயற்கைகோளை உருவாக்கி வருகின்றன. அடுத்ததாக நிஸாரை வெற்றிகரமாக ஏவுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments