பவானி ஆற்றுக்குள் காலைப் பிடித்து கொல்லும் மர்ம கும்பல் வதந்தியா ? பாக்யராஜ் புதிய வீடியோ

0 703

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்களை காலை பிடித்து மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை வெளியில் எடுக்க மர்ம கும்பல் பேரம் பேசுவதாக கருத்து தெரிவித்த இயக்குனர் பாக்யராஜ், போலீசாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்,

அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்களை அந்த ஊரை சேர்ந்த சிலர் நீருக்குள் மூச்சை அடக்கி ஒளிந்து கொண்டு கால்களை பிடித்து இழுத்துக் கொலை செய்வதாகவும், பின்னர் பலியானவரின் சடலத்தை மீட்க பேரம் பேசி சில ஆயிரங்களைப் பறிப்பதாகவும் கூறியதோடு, அந்த வீடியோவுக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பெயர் வைத்திருந்தார்.

இதற்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்றில் மூழ்கி பலர் பலியானதாகவும், அதற்கு காரணம் ஆற்றுக்குள் இருந்த பாறை என்றும், செக் டேம் கட்டப்பட்ட போது அந்த பாறை உடைக்கப்பட்டதால் தற்போது வரை அங்கு உயிர்ப்பலி இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்

கோவை மாவட்ட காவல்துறையினரும், பாக்கியராஜ் கூறியது வதந்தி என்றும், அவர் கூறியது போல சம்பவம் ஏதும் நடக்கவில்லை இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து வதந்தி என்ற தலைப்பில் விளக்க வீடியோ வெளியிட்டுள்ள கே.பாக்யராஜ், 40 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்றபோது கேள்விப்பட்டதை சொன்னதாகவும், போலீஸை குற்றஞ்சாட்டி தான் ஏதும் பேசவில்லை என்று புதிய வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்

தான் சொன்ன கருத்தை வதந்தி என்று பாக்கியராஜே ஒப்புக் கொண்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments