கடமை தவறாத காக்கி...! தெப்பக்குளத்தில் பம்மிய திருடன்..! லீவிலும் ஒரு சேஸிங்..! நீச்சலில் சென்று மடக்கிய மக்கள்..!

0 736

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர், கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தலைமறைவு குற்றவாளி இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து விடுப்பிலும் தனது கடமையை நிறைவேற்றினார்.

கன்னியாகுமரி போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு திருச்செந்தூரில் சுற்றிக் கொண்டிருந்த போது மடக்கி பிடிக்கப்பட்டு கைதான அஜிஸ் தான் இவர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜிஸ்பாபு. திருச்செந்தூர் முருகன் தரிசனத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டு வந்தார் விஜிஸ் பாபு.

திருச்செந்தூர் எல்லையில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் குளிக்க ஆயத்தமான விஜிஸ்பாபு, அங்கு குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பார்த்தார்.

அந்த இளைஞர் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம் மொளகு மூடு பகுதியைச் சேர்ந்த அஜின் என்பதும், மற்றொரு வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவானவர் என்பதும் தெரிய வந்தது.

தன்னை எஸ்.எஸ்.ஐ பார்த்து விட்டார் என்பதை தெரிந்துக் கொண்டு கரைப்பகுதியில் இருந்து நீச்சலடித்துச் சென்று தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள கல் மண்டபத்தில் அமர்ந்துக் கொண்டார் அஜின்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட எஸ்.எஸ்.ஐ விஜிஸ்பாபு, அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அஜின் தப்பிச் செல்ல முடியாத படி தெப்பக்குளத்தை சுற்றி நின்றுக் கொண்டனர். நன்கு நீச்சலடிக்கத் தெரிந்த 3 பேர் கரையிலிருந்து நடுப்பகுதிக்கு நீச்சலடித்துச் சென்றனர்.

மண்டபத்திலிருந்த அஜினை அங்கிருந்து கரைக்கு அழைத்து வந்து எஸ்.எஸ்.ஐயிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அஜினை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் எஸ்.எஸ்.ஐ விஜிஸ்பாபு. சாமி தரிசனம் செய்வதற்காகவே அஜினும் வந்திருந்ததாக தெரிவித்தனர் திருச்செந்தூர் போலீஸார்.

அஜின் பிடிபட்டது குறித்த தகவலை தக்கலை காவல் நிலையத்திற்கு தெரிவித்த சிறப்பு உதவி ஆய்வாளர் விஜிஸ் பாபு, தனது யாத்திரையை கோயிலுக்குச் சென்று நிறைவு செய்து சாமி தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments