இளைஞரை நெஞ்சில் மிதித்து ஆல்பா போலீஸ் அட்டகாசம்.. மிரண்டு போன பயணிகள்..! தாக்கியது ஏன்? எஸ்.பி விளக்கம்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரின் பைக்கில் இருந்து போலீசார் சாவியை பறித்த நிலையில், சாவியை திரும்பக்கேட்ட இளைஞரை தாக்கி கீழே தள்ளி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்த போலீஸ்காரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆல்பா சிறப்புப்படை காவலர்களில் ஒருவர், இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் தள்ளி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதிக்கும் காட்சிகள் தான் இவை..!
புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தென்காசி டவுன் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு இரு சக்கரவாகனத்தை ஓட்டி வந்த ஆஷ்டன் என்ற இளைஞரை மறித்தனர். அவரது பைக்கில் மேலும் இருவர் இருந்த நிலையில், வண்டி சாவியை எடுத்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். ஆஷ்டன் போலீசாரிடம் பைக் சாவியைக் கேட்டு வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
அப்போது ஆல்பா டீம் போலீசார் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணிக்கு வந்தனர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த ஆஷ்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் அங்கிருந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர்கள் செல்லாமல் நின்றதால் , ஆல்பா டீமில் இருந்த காவலர் அழகுதுரை என்பவர், ஆஷ்டனை அடித்து, கழுத்தில் கைவைத்து தூக்கி கீழே போட்டு பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்ததுடன், எட்டியும் உதைத்தார். இதனால் ஆஷ்டன் மயங்கி சரிந்ததாகக் கூறப்படுகின்றது.
மயங்கிச்சரிந்த ஆஷ்டனை தூக்கி ஆசுவாசப்படுத்துவதற்கு அவரது நண்பர் முகமது காசிம் முயன்ற நிலையில் அடித்த போலீஸ்காரரும் சரி, அருகில் நின்ற காவலர்களும் எந்த ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்தபடி சுற்றி வந்ததைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் மிரண்டு போயினர்.
மயக்கம் தெளியாமல் கிடந்ததால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ஆஷ்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.
பொது வெளியில் ஒருவரை போட்டு காவலர் கடுமையாகத் தாக்குவது நியாயமா? என்ற கேள்வியுடன், போலீஸ்காரர் பூட்ஸ் காலால் மிதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, வாகன சோதனையின் போது போதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாகவும், அதன் காரணமாக காவலர் அவரைத் தாக்கியதாகவும் தெரிவித்தார். இது போன்ற நபர்களை ஆதரித்தால் அது சமூக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்த அவர் இருந்தாலும் சட்டத்தின்படி சம்பவம் தொடர்பாக காவலர் அழகுதுரையிடம் துறை ரீதியாக விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
Comments