அசுர வேகப் பேருந்து அடித்து தூக்கிய காட்சி ஓட்டம் எடுத்த ஓட்டுனர்..! பொங்கி எழுந்த மக்கள் மறியல்
கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து மோதி இரு சக்கரவாகனத்தில் சென்ற நகராட்சி ஊழியரும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் 32 வயதான அசோக்குமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. புதன்கிழமை மாலை இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் தங்களது வீட்டில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு பின்னால் பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வி வி என்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. வழி நெடுகிலும் ஹாரனை ஒலிக்கவிட்டவாறே பேருந்தை அதிவேகத்தில் ஓட்டி வந்தார் பேருந்து ஓட்டுனர்.
வித்யாலயா மாற்றுத்திறனாளிகள் மையம் எதிரில் வந்தபோது, அசோக்குமார் குடும்பத்தினர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து அதிவேகத்தில் மோதி சில அடி தூரம் இழுத்துச்சென்றது. பேருந்தில் இருந்த பயணிகள் இந்த விபத்தை கண்டு அலறி கூச்சலிட்டனர்
பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கிச்சென்று பார்த்தபோது பேருந்துக்கு அடியில் இரு சக்கர வாகனம் சிக்கி இருந்தது. அசோக்குமாரும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததை கண்டதும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசீலாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதல் டிக்கெட் ஏற்ற வேண்டுமென்ற கலெக்சன் வெறியில் அசுரவேகத்தில் பேருந்தை இயக்கி இரு உயிர்களை கொன்ற ஓட்டுனரை கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Comments