சாலையில் போலீஸ் வைத் ‘ நடு’ கல்லால் விபத்துக்கள் தலைக்கவசம் அணிந்தும் பலி..! தொடரும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ?

0 883

சென்னை எண்ணூர் மணலி விரைவுச்சாலையில் விதி மீறும் கண்டெய்னர் லாரிகளை கட்டுப்படுத்துவதற்காக கவுண்டர்பாளையம், கொண்டகரை முதல் எம்.எப்.எல் சந்திப்பு வரை சாலையின் நடுவில் 5 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட கற்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது 

சென்னை எண்ணூர் - மணலி விரைவுச்சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கனரக வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு, பிரதான சாலையின் நடுவில் 5 மீட்டருக்கு ஒரு கல் என்று வழி நெடுக கல் தடுப்பு அமைத்து குறிப்பிட்ட வழியாக மட்டுமே கண்டெய்னர் லாரிகள் செல்ல வேண்டும் என்று மாதவரம் போக்குவரத்து போலீசார் புதிய நடைமுறை ஒன்றை அமலுக்கு கொண்டுவந்தனர்.

லாரிகள் கற்களுக்கு இடையே புகுந்து விதி மீறலில் ஈடுபடாமல் இருக்க கற்களுக்கு இடையேயான கயிறுகொண்டு இணைத்தும் வைத்திருந்தனர். துறைமுகங்களுக்கு செல்லும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மற்ற வாகனங்கள் சிக்காமல் எளிதாக செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முறை அமல்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த புதிதில் மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இந்த நடுகல் முறை அமலுக்கு வந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விதி மீறலால், இந்த கற்களில் மோதியும், லாரி சக்கரங்களில் சிக்கியும் 5 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் புதன்கிழமை காலை கவுண்டர் பாளையம் - கொண்டக்கரை இடையேயான சாலையில் நடுகல்லில் மோதிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மினி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் சாலையில் உயிரிழந்து கிடந்த அவரை மீட்ட போலீசார் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த நடுகல்லால் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவற்றில் 5 பேர் வரை பலியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்ததோடு, முக்கிய சாலையையும் ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற வாகன ஓட்டிகள் விரைவாக செல்ல இயலாமல் தவிப்பதாகவும், உள்ளே புகுந்து சென்று விடலாம் என்று வேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நடுகல்லில் மோதி உயிர் இழப்பதாகவும் தெரிவித்தனர்.

நல்ல நோக்கத்தில் சாலையில் நடுவில் தாங்கள் வைத்த கற்கள் லாரி ஓட்டுனர்களால் தான் முறையில்லாமல் இருப்பதாவும், அவர்கள் தங்களது புதிய முயற்சியை சீர்குலைக்க நினைப்பதாகவும் தெரிவித்த போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, அந்தப்பகுதியில் விபத்து ஏதும் நடக்கவில்லை என்றார்

எனவே முக்கிய சாலையின் நடுவில் வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் வகையில் முறையற்ற முறையில் உள்ள நடு கற்களை ஒழுங்கு படுத்த வேண்டும் அல்லது நிரந்தரமாக அகற்றவேண்டும் அதே நேரத்தில் துறைமுகங்களுக்கு செல்லும் லாரிகளை ஒழுங்குப்படுத்த மாற்றுத்திட்டத்தை போக்குவரத்து போலீசார் அமல் படுத்தினால் விபத்துக்கள் மேலும் குறையும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments