இ.பி.எஸ். உதவியாளர் வீட்டில் கடப்பாறை, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து திருட முயன்ற கும்பல் - 5 பேர் கைது
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளரின் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இ.பி.எஸ்.ஸின் உதவியாளரான அருண்பிரகாஷின் மனைவி மற்றும் பெற்றோர் நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறில் வசித்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் 2 கார்களில் சென்ற 8 பேர் கொண்ட கும்பல், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை உடைத்து விட்டு கடப்பாரை, இரும்பு ராடுகளுடன் வீட்டிற்குள் செல்ல முயன்றது. வீட்டிலிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் அக்கும்பல் தப்பி ஓடியது.
மர்ம கும்பல் உடைக்கும் வரை பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார், மர்ம நபர்கள் பயன்படுத்திய கார்களை அவற்றின் பதிவு எண்களை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மர்ம கும்பலின் கார் எண்ணுடன் ராசிபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக கார் நின்று கொண்டிருந்ததாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் காரிலிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த அவர்கள் தான் அருண்பிரகாஷின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் என தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருவதாக கூறினர். பிடிபட்ட கும்பல் முதல்முறையாக திருட்டு முயற்சியில் சிக்கியிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Comments