கிளாம்பாக்கத்தை சுற்றிக்காட்டவா? அ.தி.மு.க.-தி.மு.க காரசாரம்..! முடித்து வைத்த முதலமைச்சர்..!!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கேள்வி நேரத்தின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, தென் மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கத்திலிருந்து வரும் மக்கள் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் மக்களிடம் சபாஷ் வாங்க வேண்டும் என்றார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிளாம்பாக்கம் திட்டம் 30 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு இருந்ததாகவும், அதை தாங்கள் முழுமைபடுத்தி உள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் என்று பெயரை சூட்டியதால் தான் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதையடுத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேருந்து நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்திருந்தால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.
உடனே, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யார் வந்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை சுற்றிக் காண்பிக்க தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கிளாம்பாக்கம் விவகாரத்தில் தாங்களாக எதுவும் கூறவில்லை என்றும் பாதிப்பு குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை தான் சுட்டிக்காட்டுவதாகவும் இ.பி.எஸ். தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர், சிறு, சிறு பிரச்னைகள் மட்டுமின்றி, பெரும் பிரச்னைகளை சரி செய்த பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை சரி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Comments