டூவீலரில் சென்று 2 கொலை கஞ்சா போதையில் திட்டம் டார்கெட் தப்பி சிக்கிய கும்பல்

0 987

முன்விரோதத்தில் அடுத்தடுத்து 4 பேரை கொலை செய்ய கஞ்சா போதையில் திட்டமிட்ட கும்பல் ஒன்று நெல்லையில் ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு டூவீலரிலேயே சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொருவரையும் வெட்டிச் சாய்த்து விட்டு 3-வது நபரை தேடிச் சென்ற போது போலீஸில் சிக்கியதன் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பரபரப்பான தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்குள் மரண பயத்துடன் நுழைந்த நபர் ஒருவர் தன்னை கொலை செய்யும் நோக்கில் ஒரு கும்பல் தேடி வருவதாகவும் அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறும் வேண்டினார். உஷார் படுத்தப்பட்ட தனிப்படையினர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றியதாக நெல்லையைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன், அன்பு, சிவபெருமாள் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்.

ரத்தக்கறை படிந்த அரிவாள்களோடும், கஞ்சா போதையிலும் இருந்த அந்த கும்பல், தாங்கள் கருப்பசாமி என்பவரை கொலை செய்வதற்காக தேடி வந்ததாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நெல்லையில் ஒருவரையும், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மற்றொருவரையும் கொலை செய்து விட்டே கருப்பசாமியை தேடி தூத்துக்குடிக்கு வந்திருப்பதாகவும் கஞ்சா போதையில் உளறினர் அந்த கும்பல்.

செய்துங்கநல்லூரில் செங்கல்சூளை தொழிலாளியான ஐயப்பன் என்ற சுரேஷ் என்பவரை சனியன்று மாலையில் கொலை செய்யப்பட்டிருப்பதும், பாளையங்கோட்டையை சேர்ந்த பாபுசெல்வம் என்பவர் ரெட்டியார்பட்டியில் காட்டுப்பகுதியில் சம்பவத்தன்று காலையில் கொலை செய்யப்பட்ட விபரமும் தெரிய வந்தது.

அடுத்தடுத்து 2 கொலைகளை சர்வ சாதாரணமாக நிகழ்த்தி விட்டு 3வது நபரை கொலை செய்யும் நோக்குடன் தேடி வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டியனுக்கு பெண்விவகாரம் தொடர்பாக பாபுசெல்வத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் கார்த்திக் தரப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பவரை பாபுசெல்வம் தரப்பினர் 15 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாபுசெல்வம், ஐயப்பன் என்ற சுரேஷ், கருப்பசாமி, ஜெகன் ஆகியோரை போலீஸ் தேடிவந்த நிலையில் 4 பேரும் வெளியூரில் தங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து கஞ்சா போதையை ஏற்றிய கார்த்திக் தரப்பினர் தங்களுக்கு எதிரான பாபுசெல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இருவரை கொலை செய்து விட்டு கருப்பசாமியை தேடி தூத்துக்குடி வந்ததாகவும், அவரை கொலை செய்த பிறகு ஜெகனை கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்

தன்னை கார்த்திக் தரப்பு நோட்டமிடுவதை தெரிந்து கொண்டு கருப்பசாமி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் அவர் உயிர் தப்பியதாகவும், இல்லையென்றால் அவரையும் அந்த கும்பல் கொன்றிருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர் .

கஞ்சா போதையிலேயே கொலைகள் நடப்பதால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலியானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments