நடிகை தமன்னாவை பார்க்க முண்டியடித்த இளசுகளால் மயங்கி விழுந்த பெண்கள்..! ரசிகர்களிடம் கெஞ்சிய ரம்பா
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் நடிகை தமன்னாவின் நடனத்தைப் பார்க்க முண்டியடித்து மேடையை நோக்கிச்சென்ற இளசுகளால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த பெண்களை போலீசார் மீட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.
இனி யாழ்ப்பாணம் பக்கம் வருவீங்க.. என்பது போல இருந்ததாம் நடிகை தமன்னாவை பார்க்க முண்டியடித்த ரசிகர் கூட்டம்..!
இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியுடன் நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் திறந்த வெளியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை காண யாழ்ப்பாணம் மட்டுமில்லாமல் தமிழ் மக்கள் வசிக்கின்ற பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
இசை நிகழ்ச்சி நடந்த போது அவரவர் இடத்தில் இருந்த ரசிகர்கள் , நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ரம்பா, ஆகியோர் ஆடும் போது இளசுகள் எல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு உற்சாக மிகுதியால் மேடையை நோக்கி நகரத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது.
அடடா மழைடா பாடலுக்கு ஆடிய தமன்னாவின் ஆட்டத்துக்கு திடலே திணறும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில் அந்த பாடல் முடிந்ததும் ரசிகர்களை நோக்கி மேடையில் தமன்னா கேட் வாக் நடந்ததாகவும், தமன்னாவை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முன் வரிசைக்கு செல்ல முண்டியடித்ததால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது
இதனை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் பாடலுக்கு தமன்னா ஆடும் போது ஆர்ப்பரித்துக் கொண்டு போலீஸ் தடையை மீறி மேடையை நோக்கி ஓடிச்சென்றவர்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது
உடனடியாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த முயன்றும் பயனில்லை, இதையடுத்து பேசிய ரம்பா , உங்கள நம்பித்தானே வந்திருக்கோம் என்று பார்வையாளர்களிடம் கெஞ்சத் தொடங்கினார்
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூட்டத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை உள்ளூர் இளைஞர்களும் மீட்டனர் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ரம்பாவின் கணவர் செய்திருந்ததாகக் கூறபடுகின்றது.
Comments