வெற்றி துரைசாமி கதி என்ன ? சட்லஜ் எண்ணும் மரணக்குழி.. போலீசார் சொல்லும் திகில் தகவல்..! கண்ணீருடன் காத்திருக்கும் உறவுகள்

0 1214

ஹிமாச்சல் பிரதேசத்தில் படப்பிடிப்புக்கு லொகேஷன் பார்ப்பதற்காக சென்றபோது காருடன் சட்லஜ் நதிக்குள் தவறி விழுந்த கோர விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை உள்ளூர் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மூளை திசுவை கைப்பற்றிய போலீசார் டி.என்.ஏ சோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்

ஆர்ப்பரிக்கும் இந்த அருவியின் அதிவேகமான நீரோட்டம் செல்லும் கசாங் நலா பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்த வெற்றி துரைசாமியின் நிலை என்ன ஆனது என்பதை அறிய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குனராக உள்ள இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேயம் பயிற்சி மையத்தையும் கவனித்து வந்தார். புதிய படத்தின் படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்ப்பதற்காக இமாச்சல பிரதேசம் சென்றிருந்த வெற்றி துரைசாமி, கடந்த 4 ந்தேதி மாலை இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், கசாங் நலா மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தபோது காரை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில் பாறை ஒன்று உருண்டு வந்து கார் மீது மோதியதில் அவர் பயணித்த கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தோடிய சட்லஜ் நதிக்குள் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் வெற்றிதுரைசாமி அமர்ந்திருந்த நிலையில் காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து பயணித்த உதவியாளர் கோபிநாத் உயிருடனும், ஓட்டுனர் தன்ஜின் சடலமாகவும் மீட்கப்பட்டனர். காரை கயிறு கட்டி வெளியே இழுத்த நிலையில் வெற்றிதுரைசாமி கிடைக்கவில்லை . அவர் காரில் பயணித்ததை சிசிடிவி காட்சிகளை கொண்டு உறுதி செய்த போலீசார் வெற்றிதுரைசாமியை ஐந்து நாட்களாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடன் சட்லஜ் நதியில் தேடி வருகின்றனர்.

உள்ளூர் பழக்குடியின மக்களிடம் வெற்றி துரைசாமியின் படத்தை காண்பித்து இவர் குறித்து தகவல் தெரிவித்தால் , அவரது தந்தை, 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறி யிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளூர் மக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேடுதல் பணி குறித்து விவரித்த உயர் காவல் அதிகாரி ஒருவர், வெற்றி துரைசாமியின் செல்போன், மற்றும் அவரது உடைகள் அடங்கிய பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்றார். விபத்து நடந்த பகுதியின் அருகில் கசாங் நலா என்ற நீர் வீழ்ச்சி உள்ளதாகவும், அந்த நதியில் எப்போதும் நீரோட்டம் அதிகமாகவே காணப்படும் என்றும் 3 கிலோ மீட்டர் தூரம் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து தேடி உள்ளதாகவும், இதுவரை அந்த ஆற்றில் சிக்கியவர்களில் வெகுசிலரது உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மனித மூளை திசு ஒன்றை வைத்து டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், அதே போல சைதை துரைசாமியிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டு முடிவுகளை அனுப்புமாறு சென்னை காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, இரு பரிசோதனை முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் வெற்றி துரைசாமியின் நிலை என்ன வென்பது தெரிந்து விடும் என்றார்

அதே நேரத்தில் வெற்றிதுரைசாமி எப்படியும் உயிரோடு இருப்பார் , நிச்சயம் உயிரோடு மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையோடு சைதை துரைசாமியின் குடும்பத்தினரும், மனித நேய பயிற்சிமைய மாணவர்களும் கனத்த இதயத்தோடு காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments