பள்ளி பேருந்தில் பிளாக் ஸ்பாட்.. சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்.. தடுக்க செய்ய வேண்டியது என்ன ?

0 802

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மேல்மாம்பட்டு அருகே பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 3 வயது சகோதரனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட தந்தையுடன் வந்த சுட்டிப்பையன் பேருந்து முன்பு விளையாடியது தெரியாமல் பேருந்து கிளம்பியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் - வசந்தி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். 3 வயதான மூத்த மகன் ரவிக்குமார் காடாம்புலியூர் ஜெயந்தி வித்யாலயா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளி வாகனம் மூலம் தனது மகனை பள்ளிக்கு அனுப்பி வந்தார்.

சம்பவத்தன்று காலை தனது மகன் ரவிக்குமாரை வீட்டு வாசலுக்கு வந்த பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டார் சவுந்தர்ராஜன். அப்போது அவரது இளையமகன் ரக்சன் அந்த பேருந்துக்கு முன்பு ஓட்டுனரின் கண்களுக்கு தெரியாத இடத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இதனை எவரும் கவனிக்காத நிலையில் ஓட்டுனர் பள்ளி வாகனத்தை கிளப்பிய சிறிது நேரத்திலேயே சிறுவன் ரக்சன் வேன் மோதி சம்பவ இடத்திலேயே மூர்ச்சையானான்.

இதனால் பதறித்துடித்த சவுந்தர்ராஜன், தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ரக்சன் பலியானதை உறுதிப்படுத்தினர்.

தமிழகத்தில் இது போன்ற விபரீத விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. வருங்காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க, பிளாக் ஸ்பாட் எனப்படும் பள்ளி வாகனத்தின் தாழ்வான முன்பகுதி உள்ளிட்டவற்றை கவனிக்கும் வகையில் பார்வைக்கண்ணாடிகள் அமைத்து கொடுக்க வேண்டும் அல்லது 360 degree கேமிராவை பொறுத்தி அதனை ஓட்டுனர் பார்க்க ஏதுவாக அனைத்து பள்ளி வேனில் வசதிகளை மேப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டும் போலீசார் , மாணவர்களை ஏற்றிய பின்னர் புறப்படும் முன்பு, வாகனத்தின் இரு பக்கமும் உதவியாளர் சென்று பார்வையிடுவது அவசியம் என்கின்றனர்

அதே நேரத்தில் பள்ளி செல்லும் தங்களது குழந்தையை பேருந்தில் ஏற்றிவிடச் செல்லும் பெற்றோர், அவசியமின்றி, தங்களது மற்ற குழந்தைகளை பள்ளி வாகனம் அருகே கூட்டிச்செல்லாமல் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments