மின்சாரத்தை துண்டித்து.. பெண் காவலர் வீட்டுக்குள் அரிவாளோடு புகுந்த கும்பல்... அடைக்கலம் கொடுத்தது தப்பா..?

0 1356

கொலை வெறி கும்பலிடமிருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அடைக்கலம் கொடுத்த பெண் காவலரின் வீட்டை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி உள்ளே புகுந்து வெறியாட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது

கொலை வெறி கும்பலுக்கு பயந்து வீட்டை பூட்டிக் கொண்டு ஒரு குடும்பத்தினர் குழந்தைகளோடு இருப்பதும் கையில் ஆயுதங்களுடன் அந்த கும்பல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வர முயற்சிப்பதும் சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அல்ல... மதுரை மாவட்டத்தில் பெண் காவலர் வீட்டை தாக்கிய நிஜ காட்சிகள் தான் இவை

மேலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். ஊரில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்ததால் அவர் மீது மற்றொரு தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக தன் மீது தாக்குதல் நடத்தியதாக வினோத் என்பவர் மீது மேலூர் போலீஸில் புகார் அளித்தார் ராசாங்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் ராசாங்கம் வசிக்கும் தெருவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று. தெருவில் நின்றுக் கொண்டிருந்த ராசாங்கத்தின் அண்ணன் அசோக்கின் மனைவியை தாக்கியதோடு, வீடு புகுந்து அசோக்கையும் அவரது மகன் விஜயையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

ராசாங்கம் வீட்டில் இல்லாததால் கும்பலின் தாக்குதலிலிருந்து அவரது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எதிர் வீட்டைச் சேர்ந்த பெண் காவலர், அவர்களை பாதுகாப்புக்காக தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இதனை தெரிந்துக் கொண்ட கொலை வெறிக்கும்பல், அவர் ஒரு போலீஸ் என்ற சிறு பயம் கூட இல்லாமல் அவரது வீட்டுக் கதவு ஜன்னல்களை உடைத்து வெறியாட்டம் ஆடியது.

அதில் ஒருவன் , இப்போது போலீசுக்கு போன் செய்து வர வை பார்க்கலாம் என சவால் விட்டான்.

வீட்டிற்குள் இருந்தவர்கள் தடுக்க முயன்ற போதும் ஒருகட்டத்தில் முடியாமல் போகவே அந்த கும்பல் வீடு புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கத் துவங்கியது.

அதில் ஒருவன் வீட்டிற்குள் இருந்த குழந்தை ஒன்றை தாக்க முயல அந்த தாய் கண்ணீரோடு கெஞ்சி தடுத்தார்.

கஞ்சா போதையில் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களையெல்லாம் ஜாம்பிகள் போல தாக்கியதோடு பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியது. அடைக்கலம் புகுந்தவர்களில் சிலர் பின்புற வாசல் வழியாக தப்பிச் சென்றனர்.

காவல்துறையில் பணியாற்றி வரும் அருவுகத்தின் மகள் பிரசவித்த பச்சிளம் குழந்தையோடு வீட்டிலிருந்ததால் உடனடியாக காவல்துறைக்கு இந்த கொடூர தாக்குதல் குறித்து தகவல் அளித்துள்ளார்.

சைரன் வைத்த வாகனத்தில் போலீஸ் படை வருவதை பார்த்த பிறகே அந்த கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது

இதில் பத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், வினோத் உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழும், ராசாங்கம் தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர் மேலூர் போலீஸார்.

கஞ்சா போதையில் கும்பல் நடத்திய கொடூர தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments