50 லட்சம் ரூபாய் காண்டிராக்ட்டுக்கு ஆப்பு வச்சுட்டாம்பா..! பப்ளிக்கிடம் கதறிய ஒப்பந்ததாரர்

0 1369

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் நடைபெற்ற தரமற்ற சாலைப் பணிகளை தட்டிக் கேட்ட இளைஞரை  ஆபாசமாகப் பேசி தாதா போல மிரட்டிய ஒப்பந்ததாரர்,  இளைஞர் வீடியோ எடுப்பதைக் கண்டு பயந்து 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் எடுத்த தனக்கு ஆப்பு வைத்து விட்டதாக புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சாலைப் பணிகளை ஏன் தரமற்ற முறையில் மேற்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய இளைஞரிடம் ஆபாசமாகப் பேசி தாதா போல மிரட்டிய புகாருக்குள்ளாகி இருக்கும் ஒப்பந்ததாரர் பீட்டர் இவர்தான்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி 10-வார்டு கல்லங்குழி கிராமப் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைப்பணி நடைபெற்று வருகிறது. பணியை முளவிளை பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பீட்டர் என்பவர் மேற்கொண்டு வரும் நிலையில், அந்த சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை மதியம் பணி நடக்கும் இடத்தை பார்வையிட ஒப்பந்ததாரர் பீட்டர் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாலையில் மணலை மட்டும் தட்டி ஜல்லி போடுகிறீர்களே? இந்த சாலையை வெட்டி எத்தனை லோடு மண் எடுத்து வித்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்வியை முன் வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் பொதுமக்களை ஆபாசமாக பேசத் தொடங்கியதோடு உங்களுக்கு பாவம் பார்த்து ரோடு போட்டா இதான் மரியாதையா? என கூறினார். இதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் .. உங்கள் பணமா என கேட்டதால், ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற ஒப்பந்ததாரர் பீட்டர் பெண்கள் மத்தியில் இதை படம் எடு என்று ஆபாச சைகை காண்பித்ததோடு அருவெறுக்கத்தக்க வகையில் திட்டி தீர்த்தார்.

இதைக் கண்ட பெண் ஒருவர் , இவ்வளவு வயசாகுது இப்படி செய்ய வெட்கமா இல்லையா ? என்று கேட்டதோடு , அவரை வார்த்தைகளால் மடக்கினார்.

தொடர்ந்து தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞரை நோக்கி வந்த பீட்டர், இவனால 50 லட்சம் ரூபாய் பில்லு கைக்கு வரல சாலையை மண்ணால் போடுகிறேன்னு சொல்லி எனக்கு ஆப்பு வச்சிட்டான்.. அந்த வேதனையில் பேசுகிறேன் என்று கதறிய படியே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்வதை கையும் களவுமாக வீடியோ எடுத்ததால் கண்டிராக்டர் பீட்டர் கரண்ட் ஷாக் அடித்த காகமாய் தவித்து போயிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் தரமற்ற சாலைபணிகளை மேற்கொண்டதோடு மக்களை மிரட்டிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments