அத்தை இப்படி செய்யலாமா..? விடுமுறைக்கு வந்த அண்ணன் மகள் பாலியல் தொழிலில் தள்ளிய அத்தை..

0 1119

பள்ளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த சொந்த அண்ணனின் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளியதோடு, இதனை தட்டிக் கேட்ட அண்ணனையே, தங்கை ஒருவர், தனது செல்வாக்கால் 12 நாட்கள் சிறையில் தள்ளிய கொடூரம் சென்னையில் நடந்தேறியது. சிறையிலிருந்து வெளியே வந்த அப்பாவி தந்தை உயரதிகாரிகளிடம் புகாரளித்த பிறகே கில்லாடி அத்தை கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னையில் பள்ளியொன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி வாந்தி எடுத்து மயக்கம் அடையவே, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆட்டோ ஓட்டுநரான தந்தை அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், பலரால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் மருத்துவர்.

அதிர்ந்து போன தந்தையோ சிறுமியிடம் என்ன நடந்தது என விசாரிக்க, விடுமுறைக்காக கோயம்பேட்டில் உள்ள பூ வியாபாரியான அத்தை வீட்டுக்கு சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை தந்தையிடம் விவரித்துள்ளார் அந்த சிறுமி.

வேளச்சேரி, குன்றத்தூர் பகுதிகளில் தன்னை அடைத்து வைத்த வீட்டிற்கு ஏராளமானவர்கள் வந்துச் சென்றதாக கண்ணீரோடு அந்த சிறுமி கூறியதாக சொல்லப்படுகிறது.

ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு தனது தங்கையை வரவழைத்த சிறுமியின் தந்தை, எனது மகளின் வாழ்க்கையை இப்படி சீரழித்து விட்டாயே? எனக்கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த சிறுமியின் அத்தை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு சென்று தம்மை தாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார். விசாரணைக்கு அழைத்த போலீஸாரிடம் தனது தங்கையால் தன் மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை எடுத்துக் கூறியும் காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸார் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

12 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக கோயம்பேட்டில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, 8 மணி நேரம் காத்திருந்து துணை ஆணையர் உமையாளை சந்தித்து தனது கண்ணீர் கதையை விளக்கினார் அந்த அப்பாவி தந்தை.

இதன் பிறகே, சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் வெளியே தெரிய வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார் துணை ஆணையர் உமையாள்.

போலீஸாரின் விசாரணையில், சிறுமியை அவரது அத்தை ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்ததும், அவர் வேளச்சேரியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து ஐந்து நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

அத்தையின் தோழிகளான துர்கா, காயத்ரி ஆகியோரும் சிறுமியை குன்றத்தூர் மற்றும் போரூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதால் அவர் கர்ப்பமுற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியின் அத்தை தேன்மொழி, அவரது தோழிகளான துர்கா, காயத்ரி ஆகியோரை கைது செய்ததோடு, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களையும் தேடி வருகின்றனர்.

தன்னை விசாரணைக்கு அழைத்த கண்ணகி நகர் போலீஸாரிடம் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறிய போதும் போலீஸார் அதனை கண்டுகொள்ளாமல் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்ததால் இதுகுறித்து கண்ணகி நகர் போலீஸாரிடம் விசாரணை நடத்தவும் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் விஷயத்தில் யாரையும் முழுமையாக நம்பாமல் கண்காணிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என தெரிவித்தனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments