விஜய்யை அரசியலுக்குள் இழுத்து வந்த அழுத்தங்கள் ஆரம்பமே வெற்றி தான்..!

0 1034

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ள  நடிகர் விஜய் விரைவில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார். 

விஜய்யை அரசியலை நோக்கி நகர வைத்த அழுத்தங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு  

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் விஜய் என்கிற ஜோசப் விஜய்..!

தனது மகன் விஜய்யை, 1984 ஆம் ஆண்டு வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், நாளைய தீர்ப்பு மூலம் நாயகனாகவும் தமிழ் திரை உலகில் களமிறக்கினார் எஸ்.ஏ. சந்திரசேகர்

தொடர்ந்து காதல் படங்களில் நடித்து இளசுகளை கவர்ந்தாலும், விஜயகாந்துடன் நடித்த செந்தூரப்பாண்டி படம் விஜய்யை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது

அடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் அவரை முன்னனி நடிகர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது

இடையில் கொஞ்சம் சறுக்கினாலும் குஷி, பிரியமானவளே , பிரண்ட்ஸ் என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்

தனது படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் விஜய் , படம் முழுவதும் ஆக் ஷன் ஹீரோ வேடத்தில் நடித்தால் அந்தப்படம் ஓடாது என்ற செண்டிமெண்டை, திருமலை படத்தின் மூலம் உடைத்து ஆக்சன் ரூட்டுக்கு மாறினார்

கில்லி ..திருப்பாச்சி.. சிவகாசி .. போக்கிரி... என்று விஜய் பற்ற வைத்த ஆக்சன் பட்டாசுகள் ஒவ்வொன்றும் தமிழ் திரை உலகில் அதிர்வேட்டுக்களாய் வெடிக்க முன்னனி ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தாலும் 2009ல் இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இதனால் இவரது படங்களுக்கு அரசியல் அழுத்தம் ஆரம்பமானது.

காவலன் படத்தை வெளியிடுவதற்கே தடுமாறும் சூழல் உருவானது.

இதையடுத்து வந்த 2011 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு திரட்டியது.

ஜெயலலிதாவை முதல்வராக்க தான் அணிலாய் இருந்து உதவியதாக விஜய் தெரிவித்தார்

துப்பாக்கியின் வெற்றிச்சத்தம் ஓங்கி ஒலிக்க தொடங்கியதால், தன்னை அடுத்த தலைவராக கருதிய விஜய்க்கு, அப்போதைய ஆளும் கட்சி கொடுத்த அழுத்தத்தால், தலைவா படம் திரைக்குவர கையை கட்டி வீடியோ வெளியிடும் நிலை விஜய்க்கு ஏற்பட்டது

அன்று தொடங்கிய சர்ச்சை கத்தி, புலி, மெர்சல் , சர்க்கார் என நீண்டு கொண்டே சென்றது, சர்க்கார் படத்தில் அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் ஒரு விரல் புரட்சியை பற்ற வைத்தார் விஜய்

2021 சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ததால் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ சந்திரசேகரையே மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கினார் விஜய்

பிகில் , மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ என அவரது படங்கள் பல கோடிகளை வாரிக் குவிக்க அவரது சம்பளம் 150 கோடிகளை தாண்டியது.

அளவுக்கதிகமாக பணம் வந்ததால் வருமானவரித்துறை சோதனையும் சேர்ந்தே வந்தது.

பட வெளியீடு தொடங்கி ஜோசப் விஜய் என்ற பெயரைக்கூட சர்ச்சையாக்கியவர்களுக்கு தனது அரசியல் மூலம் பதில் அளிக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஊழல் மற்றும் பிளவுவாதங்களுக்கு எதிராக கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ள விஜய்யின் இலக்கு ஒன்றுதான்..2026 ல் கப்பு முக்கியம் பிகிலேய்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments