10 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேர்ந்த பெண்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு
2024-25 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என அறிவித்தார்.
பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அடுத்த நிதியாண்டின் முதல் சில மாதங்களுக்கான செலவினங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது.
தொடர்ந்து 6ஆவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியின் திட்டங்களால் ஏற்பட்ட பலன்கள் வெளிப்படையாக தெரியத் தொடங்கியிருப்பதாக கூறினார்.
இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி உள்ளிட்ட நேரடி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
எனினும், 2009-10ஆம் நிதியாண்டில் 25,000 ரூபாய் வரையும் 2010-11 முதல் 2014-15 வரை 10,000 ரூபாய் வரையும் வரி கேட்பு நோட்டீஸ்கள் கைவிடப்படுவதாகவும் இதனால் ஒரு கோடி பேர் பலன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள், வளர்ச்சித் திட்டங்களால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறிய அவர், 2024-25 நிதியாண்டில் நாட்டின் கட்டமைப்புத் திட்டங்களை உள்ளடக்கிய முதலீட்டு செலவின இலக்காக 11 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேர்ந்த பெண்கள் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் 30 கோடி பெண்களுக்கு சுமார் 34 லட்சம் கோடி ரூபாய் வரை முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
Comments