எப்பத் தான் வருவீக... உள்ளம் ஏங்கிய கிராமக் குயில் குரல்வளை நெரித்துக் கொலை... மைக் செட்டுக்காரரின் பக்கா நாடகம்...
மதுரையில், காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நாட்டுப்புற பாடகியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு மாரடைப்பில் அவர் இறந்ததாக நாடகமாடிய மைக் செட்டுக்காரர் போலீஸில் சிக்கியதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
எப்பத்தான் வருவீக என கிராமத்து மேடைகளில் கானம் இசைத்த இந்த கிராம குயிலின் கணீர் குரலை இனிமேல் கேட்க முடியாமல் செய்த மைக் செட்டுக்காரர் தான் இவர்.
"கிராமக் குயில்" என அழைக்கப்பட்டு வந்த மேடை பாடகியான மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கவிதா கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அங்கே மைக் செட் அமைத்துக் கொடுத்து வந்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாகராஜனுடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரும் மனைவியை பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
அவரவர் குழந்தைகளை தங்களின் பெற்றோர் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்ததோடு, தம்பதியர் பதினெட்டான்குடி கிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கினர். ஆனாலும், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று கோவில் விழாவில் பாடுவதற்காக மதிச்சியத்தில் தங்கியுள்ளார் கவிதா. அங்கு வந்து அவரது ஏ.டி.எம். அட்டையை வாங்கிச் சென்ற நாகராஜன் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிலிருந்து எடுத்ததாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பிய கவிதா இதுகுறித்து நாகராஜனிடம் கேட்ட போது, திருப்பரங்குன்றத்தில் தான் வேறு வீடு பார்த்துள்ளதாகவும் அதற்காக பணம் எடுத்ததாகவும் கூறியுள்ளார் நாகராஜன். ஆனால், வேறு வீட்டிற்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை எனவும் பணத்தை திரும்பத் தருமாறு கவிதா கேட்கவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரது கழுத்தை பிடித்து நாகராஜன் நெரித்ததாகவும் கூறப்படுகிறது.
வலி தாங்காமல் கவிதா கூச்சலிட்டவாறே மயங்கி சரியவும், அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தனது மனைவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளார் நாகராஜன். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கவிதாவை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
அதிர்ச்சியடைந்தாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த நாகராஜன், தன் மனைவி உயிரிழக்கவில்லை என கூறி ஊரார் முன்னிலையில் நாடகமாடி உள்ளார். ஆட்டோ ஒன்றை வரவழைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கவிதாவை கொண்டு சென்ற போதும் உயிரிழப்பை உறுதி செய்தனர் மருத்துவர்கள்.
உடற்கூராய்வின் போது கவிதாவின் கழுத்து எலும்புகள் உடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தலைமறைவாகி விட்ட நாகராஜனை தேடி கண்டுபிடித்த போலீஸார் அவரிடமிருந்த 65 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம் அட்டையில் பணம் எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கவிதாவின் கழுத்தை நெரித்ததாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் நாகராஜ் வாக்குமூலம் அளித்ததால் அவரை கைது செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
குடும்ப தகராறில் ஆத்திரத்தில் கணவன் செய்த செயலால் 4 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தனர் போலீஸார்.
Comments