அரசு தொடக்கப் பள்ளியில் பாலியல் அத்துமீறல்!
நெல்லை சேரன்மாதேவி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தெரிவித்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை வீடியோவாக வெளியிட்டதாக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு புகாருக்குள்ளாகி இருக்கும் தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றொரு ஆசிரியையிடம் புகார் தெரிவிக்கும் 6 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சின்னஞ்சிறு மாணவிகளின் பெற்றோரை இது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, வீடியோ வெளியானது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் மங்களம் என்ற ஆசிரியைக்கும் ,பள்ளியின் தலைமை ஆசிரியைக்கும் இருந்து வந்த அதிகாரப் போட்டி காரணமாக பள்ளி மாணவிகள் தெரிவித்த பாலியல் அத்துமீறல் தொடர்பான புகாரை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தது தெரியவந்தது.
50 வயதைக் கடந்தவரான ஆசிரியை மங்களம் கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பை உணராமல், சிறுமிகளின் புகார் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் அளிக்காமல், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகங்களை பொதுவெளியில் தெரியக்கூடிய வகையில் வீடியோவை வெளியிட்டதால், மங்களத்தையும் அவருக்கு துணையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக பள்ளி தலைமை ஆசிரியை, இரு ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர், ஆட்டோக்காரர், முதியவர் ஒருவர், இரு அண்ணன்கள் என வீடியோவில் பெரிய பட்டியலையே வரிசையாக கூறி இருப்பதால், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித் துறையும் சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து தீவிரமாக விசாரித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலம் பெற்று, அடையாள அணிவகுப்பு நடத்தி அத்துமீறலில் ஈடுபட்ட பாலியல் அரக்கர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments