சகோதரி காதலனின் தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்த தம்பியால் பரபரப்பு..! சகோதரியும் வெட்டிக் கொலை

0 1451

மதுரை அருகே பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த கணவரை ஒரு வாரத்தில் பிரிந்து வந்ததோடு, தான் 3 வருடங்களாக காதலித்து வந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்த பெண்ணும், அவரது காதலனும் தலையை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வந்த இவரும், அதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்கள் சாதியைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்தனர்

திருமணம் செய்து கொடுத்த ஒரே வாரத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு என்று மகாலட்சுமி தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அங்கிருந்தபடியே தனது காதலன் சதீஷ்குமார் உடன் அடிக்கடி போனில் பேசி சாதி மறுப்பு காதலை தொடர்ந்ததாகவும், இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் செல்லும்போது வழிமறித்த பிரவீன்குமார் , அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டியதில் தலை துண்டானது.

துண்டான சதீஷ்குமார் தலையை கையோடு எடுத்துச்சென்று தங்கள் ஊரின் நாடக மேடையில் வைத்த பிரவீன்குமார் நேராக, தனது வீட்டிற்கு சென்று சகோதரி மகாலட்சுமியின் வாய் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தடுக்க வந்த தாய் சின்ன பிடாரியின் கையையும் துண்டாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கூடக்கோவில் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைதுண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் இடத்திற்கு வந்த திருமங்கலம் சரக டிஎஸ்பி வசந்தகுமார் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பிரவீன்குமாரை 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் பிரவீன்குமாரை கைது செய்து இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments