மூக்க முட்ட குடிப்பாராம்.. செல்போனை தொலைச்சிட்டு அலப்பறை கிளப்புவாராம்..! போராளிக்கு போனஸ் கொடுத்த போலீஸ்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் வெளுத்து விட்ட சம்பவம் அரங்கேறியது.
போதையில் செல்போனை தொலைத்து விட்டு திடீர் போராளியாக மாறியவருக்கு போலீஸ் கொடுத்த போனஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியை சேர்ந்த மணி.
பட்டதாரி இளைஞரான இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பேருந்தில் ராசிபுரத்திற்கு சென்றார்.
இறங்கும் இடத்தில் செல்போன் தொலைந்து போனதால் ஆவேசமானார் மணி
பேருந்தில் இருந்து இறங்கிய மணியின் தாய் , தனது மகன் இத்தோடு 14 வது போனை பறிகொடுத்து இருப்பதாக கூற, தனது செல்போனை எடுத்தவர்கள் தராவிட்டால்... என்று கூறி ஆபாசமாக பேசி பேருந்து நிலையை இருக்கைகளை ஓங்கி அடித்து அட்டகாசம் செய்தார் மணி
மீண்டும் பேருந்தில் ஏறி நடத்துனரிடம் குரலை உயர்த்த, மொபைல் போன் தொலைந்ததற்கு நிர்வாகம் பொறுப்பில்லை என கூறியதால் ஆத்திரமடைந்த மணி, நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்து கண்ணாடியையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.
தனக்கு நியாயம் வேண்டும் என்றும் கூறி பேருந்தை விட்டு இறங்க மறுத்து முதல் அமைச்சரை வரச்சொல்லுங்கள் என்று சவால் விட்டார்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் , அவரை சமாதானப்படுத்த முயல, சொல்பேச்சுக்கேளாமல் தனது ரகளையை தொடர்ந்தார்
ஒரு கட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரின் சட்டை மீது கை வைத்து அவரை தாக்க முயன்றதால் மணியின் தலையில் ரெண்டு போடு போட்டு, சட்டையை பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்
ராசிபுரம் காவல்துறையினர் மணியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனை பறி கொடுத்ததோடு போலீசாரிடம் வம்பிழுத்து போனஸாக வழக்கும் வாங்கி இருக்கிறார் மணி என்றனர் போலீசார்.
Comments